திராவிடம் – ஆட்சி இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் நடுவே 50 ஆண்டுகால  இலட்சிய வரலாறு  இருப்பதை நாம் உணரும் காலம் இது.

திராவிடம் என்பது இனத்தால், மொழியால்  மான உணர்வு பெற்று, கொள்கை முழக்கம் செய்து போராட்டத்தை முன்னெடுத்த சொல். 1917-ல் தொடங்கிய நீதிக் கட்சியின் பணி 1967 வரை போராட்டமாகவேதான் இருந்தது. போராட்டத்தின் வெற்றி – தோல்வியை தீர்மானிக்கும் உரிமை மற்றவர்களிடமே இருந்ததே தவிர – திராவிட இயக்கத்திடம் இல்லை.

இந்நிலையில்தான் போராட்டத்தின் வெற்றியை, அது வெறும் வெற்றி மட்டுமல்ல, சட்டப்படியான வெற்றி என்பதை நிலைநாட்டும் காலம் கனிந்தது. 1917-ல் தொடங்கி 1967 வரை நடைபெற்ற போராட்டங்களின் கொள்கை முழக்கங்களை சட்டமாக்கியது; 1967-ல் அமைந்த  திராவிட ஆட்சியே!

“தொட்டால் தீட்டு

பார்த்தால் தீட்டு

எதிரில் நின்றால் தீட்டு’

இப்படி வருணாசிரமமே நடைமுறை சட்டமாக இருந்த காலம் மாறி

தீண்டாமை ஒரு பாவச்செயல்

தீண்டாமை ஒரு மனித நேயமற்ற செயல்

தீண்டாமை ஒரு பெருங்குற்றம்

என்ற நிலை உருவானதே திராவிட ஆட்சியின் வெற்றி.

தீண்டாமையை திராவிட ஆட்சி முற்றிலும் ஒழித்து விட்டதா?  என நீங்கள் கேட்கலாம்.  திராவிட ஆட்சியில் முற்றிலும் ஒழிக்க முடியவில்லை என்றாலும் முழுவதும் முடிக்காமல் ஓயாது ஏன் தெரியுமா?

“பள்ளிக்கூடம் வேண்டும் என்பதற்காக 50 ஆண்டுகள் போராட்டம்

தமிழில் பாட வேண்டும் என்பதற்காக 70 ஆண்டுகள் போராட்டம்

சமமாக உட்கார்ந்து சோறு சாப்பிட 100 ஆண்டுகள் போராட்டம்’’

இப்படி அடுக்கடுக்கான போராட்டங்களை காலங்காலமாக மேற்கொண்டிருந்த போராட்டத்தில் பொதிந்திருந்த கோரிக்கைகளை அரை நொடியில் சட்ட வடிவம் ஆக்கியதுதான் திராவிட ஆட்சி.  வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத கொடை – நாம் பெற்ற திராவிடர்  என்ற உணர்வும், திராவிடத்தால் மாநிலம் பெற்ற உரிமைகளும், அதன் மூலம் திராவிட மக்கள் பெருஞ்சமூகம் அடைந்த மேம்பாடுகளும் ஆகும்.

திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரான தமிழ்வேள் பி.டி.ராஜன் அவர்கள்  நீதிக்கட்சியின் பொன்விழா மலரைத் தொகுத்திருந்தார். அதில் 1917-ல் தொடங்கி 1967 வரை இந்த தமிழ் சமூகம் பட்ட அவமானங்களையும், வேதனைகளையும் வகைப்படுத்தி அதனை போக்க திராவிட இயக்கம் எடுத்த நடவடிக்கைகளையும் அவர் பட்டியல் இட்டுள்ளார். அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமை, பாராமை கொடுமைகளில் உழன்று அழிவதையும், பொது இடங்களில் தெருவில் நடமாடவும், குடிநீர்க் கிணற்றில் தண்ணீர் எடுக்கவும் பிறரோடு ஒன்றாக அமர்ந்து உண்ணவும் – நீதிக் கட்சி வழித் தடம் போட்டது அது மட்டுமல்ல, தேவதாசி முறை ஒழிப்பிற்கு அடித்தளம் இட்டு பொட்டுக் கட்டும் வழக்கம் முறையற்றது என சட்டம் இயற்றவும் வழிசெய்தது. நீதிக் கட்சியின் மீட்சி திராவிட ஆட்சியே என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நெடிய வரலாற்றை அறியாமல், அதில் ஆர்வம் காட்டாமல், அறிந்திருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் மறைத்துக்கொண்டு, இன்றைக்கு திராவிடம் வேண்டாம், திராவிடம் ஒழிப்போம், திராவிடம் அழிப்போம் என்றெல்லாம் பேசும் நண்பர்களே, “பொட்டுக் கட்டி விடுதல்’என்றொரு’ கொடுமையான பழக்கம் இந்த சமூகத்தில் இருந்ததை யாரேனும் அறிவீர்களா? அறிந்தவர்கள், அத்தகைய நிலையில் பெண்களை நடத்தவேண்டும் என்று விரும்புகிறீர்களா? சமூக மாற்றங்கள் இல்லாத அரசியல் வெற்றி ஒருபோதும் பலன் தராது.

திராவிட இயக்கம் இந்த சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் புரட்சிகரமான மாற்றங்கள் அளப்பரியன. 50 ஆண்டுகாலம் என இன்று நாம் குறிப்பிடும், இந்த திராவிட ஆட்சியின் தொடக்கம் 1967 மார்ச் மாதம் 6-ம் தேதி. அன்றுதான் தமிழகத்தின் முதல்வராக பேரறிஞர் அண்ணா பொறுப்பேற்றார். ஆனால் 11.08.1957-லிலேயே  மதுரையில் அண்ணா அவர்கள் “1967’’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் அவரின் பேச்சு முழுவதும் 1917 நிலைமைகளை சுட்டிக்காட்டி, 1967-ல் அதனை உடைக்க நாம் ஆட்சி பீடம் ஏறுவோம் என்று சூளுரைத்தார்.

திராவிடம் என்ற கருத்தியலுக்குள் ’மாநில சுயாட்சி, “ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமூகம்’’, “சமூக நீதி, “மொழிக் கொள்கை’’-இவற்றை வார்த்தெடுத்து, கொள்கை முழக்கம் செய்து அதில் வெற்றி பெற்று, அந்த வெற்றியை இந்நாளும் எந்நாளும் தக்க வைக்க திராவிட ஆட்சியின் போராட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

மேற்கண்ட உரையில் அண்ணா அவர்கள் திரு.டி.எம்.நாயர் அவர்கள் சொன்னதாக ஓர் கருத்தை வழிமொழிந்தார்.

At any time Tamilians will prefer London to Delhi’ என்று “நீ  லண்டனிலே அடிமைப்பட்டிருக்கிறாயா? டெல்லிக்கு அடிமைப்பட்டிருக்கிறாயா? என்று எங்களைக் கேட்டால் தென்னிந்தியர்களாகிய நாங்கள் லண்டனுக்கு அடிமைப்பட்டிருந்து விடுதலை பெறுவோமே தவிர – டெல்லிக்கு ஒரு பொழுதும் அடிமைப்பட்டிருக்க மாட்டோம்’ என்ற மாநில சுயாட்சியின் குரலை ஒலித்தார். அதுதானே நிகழ்ந்தது. லண்டனிடம் அடிமைப்பட்டிருந்த இந்தியா விடுதலை அடைந்தது. இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சுயாட்சி இன்றுவரை முழுமையடையவில்லை.

1967-ல்தான் தமிழ்நாட்டிற்கு “தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றப்பட்டது. ஆனால் அதன் முதல் தீர்மானத்தை 1957-லேயே அண்ணா தலைமையில் 15 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் ‘பிரேரேபணை’’ தீர்மானம் கொண்டு வந்தது. சபாநாயகர் தீர்மானத்தை வாபஸ் பெறுகின்றீர்களா? என்று அண்ணாவை பார்த்து கேட்ட பொழுது அண்ணா மறுத்தார். அப்பொழுது பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.சங்கரன் “தமிழ், தமிழ்நாடு என்று இவ்வளவு தீவிரமாக பேசுகின்ற தி.மு.கழகத்தார்; தங்களுடைய கழகத்தின் பெயரை ‘தமிழ் முன்னேற்றக் கழகம்’ என்று மாற்றிவிடக்கூடாதா என்றார்.

அண்ணா – பொது நிகழ்வில் அதற்கு பதில் அளித்தார்;. “திராவிடம் எங்கள் இதயம் என்றால் தமிழ் அதன் துடிப்பு’ என்றார். இந்தித் திணிப்பு வந்த பொழுது கழகம் கண்ட களத்தில் அண்ணா அவர்கள் அறிவித்த தளபதியாய் தலைவர் கலைஞர் தோன்றினார். இன்று மத்தியில் ஆளுவோர் திராவிடத்தை அழித்து போகி கொண்டாட வேண்டும் என்று கூறுவதன் காரணம் ஒன்றே.

மாநில சுயாட்சி

மொழிக் கொள்கை

சமூக நீதி

இவை மூன்றும் திராவிட இயக்கத்தின் இதயத்துடிப்பு. இவற்றை நிறுத்தி மதவாதத்தையும், திணித்து மாநில உரிமைகளை பறித்து, மொழிக் கொள்கையை சிதைக்க  நினைக்கிறார்கள். இந்த நிலையை எதிர்க்கதான் திராவிட ஆட்சி தேவை.

1938-ல் தொடங்கி இன்றுவரை நம்மிடையே இந்தியை திணித்து, இந்தியை கற்றால்தான் நீ இந்தியன் என்கிற பொழுதுதான் இந்தித் திணிப்பை திராவிட இயக்கம் எதிர்க்கத் தொடங்கியதே தவிர, இந்தி என்ற மொழியை எதிர்க்கவில்லை. தாய்மொழி அல்லாத ஒரு மொழியைக் கட்டாயமாகக் கற்றாக வேண்டும் இல்லையேல்- நீ உன் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்படுவாய் என்ற நிலையைத்தான் திராவிட இயக்கம் எதிர்க்கிறது. 1974-ல் கலைஞர் அறைகூவல் விடுத்தார்.

“இந்தி வேண்டுமானால் இந்தியாவை மறந்துவிடுங்கள்

இந்தியா வேண்டும் என்றால் இந்தியை கைவிடுங்கள்’’

என்ற போர்க்குரல் இன்றும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

ஆட்சி’’ என்றவுடன் பாலம் கட்டினோம், சாலை போட்டோம், சாக்கடை கட்டினோம் என்பது மட்டும் சாதனை அல்ல. மனிதனை மனிதனாக பார், எவனும் எவனுக்கும் இளைத்தவன் அல்ல. என் மொழியை சிறுமைப்படுத்த எவனுக்கும் உரிமை இல்லை.

என் நாட்டை, நான் ஆளும் முழு சுயாட்சியில் தலையிடும் உரிமை எவனுக்கும் இல்லை என்ற உணர்வும் நிலையும் உருவாக திராவிடம் அன்றும் இன்றும் என்றும் தேவையாக இருக்கிறது.

இந்த உயர்ந்த இலட்சியத்திற்கான சட்ட பாதுகாப்புதான் திராவிட ஆட்சி- அதுவும் குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. திராவிட ஆட்சியும் – தமிழகத்தின் வளர்ச்சியும் பிரிக்க முடியாதவை.

-நன்றி நக்கீரன் 

Tagged: DMK, ADMK, Diravidar Kalagam, Samooga Neethi Katchi, Tamilnadu,