தமிழ் மாநில மொழி என்றால் இந்தியும் மாநில மொழி தான் என்று கூறி விவாதத்தின் போது இந்தியில் பேசிய பேச்சாளரின் மூக்குடைத்து தமிழில் பேசியவர் எழுத்தாளர் ஞாநி. இந்தி திணிப்பு நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் ஆங்கிலத்தில் பேச அப்படியானால் நானும் தமிழில் பேசுவேன் என்று தைரியமாக சொன்னவர் ஞாநி.

2015-ம் ஆண்டு என்டிடிவியின் பிரபல விவாத நிகழ்ச்சியான ‘பிக் ஃபைட்’ நிகழ்ச்சியில் இந்தியை நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிப்பது குறித்து விவாதம் நடைபெற்றது.

இதில் இந்தி மொழியின் பெருமை குறித்து பேச வந்த பெண் பேச்சாளர் இந்தி மொழியில் விவாதத்தில் பேச, அவர் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தவர் ஞாநி.

வலுவான எதிர்ப்பை பதிவு செய்த ஞாநி

இது ஆங்கில நிகழ்ச்சி உங்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியும் போது ஏன் இந்தியில் பேசுகிறீர்கள் என்று ஞாநி அந்த பெண் பேச்சாளரிடம் கேட்டார். நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கியவரும் பெண் பேச்சாளரை ஆங்கிலத்தில் பேச வலியுறுத்த அதை மறுத்த அந்த பெண் தொடர்ந்து இந்தியிலேயே பேசினார்.

இந்தி திணிப்பை எதிர்த்தவர்

இதனால் தனது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்த ஞாநி, அவர் இந்தியில் பேசினால் தானும் தமிழில் பேசுவேன் என்று தமிழில் பேசினார். ஞாநியின் வாதம் சரியே என்று மற்றொரு பேச்சாளர் தன்னுடைய தாய்மொழியான தெலுங்கில் பேசத் தொடங்கினார். தமிழகம் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்தி திணிப்பிற்கு எதிராக போராடி வருவதாக கூறினார். இந்தி திணிப்பை மட்டுமே தமிழகம் எதிர்ப்பதாகவும் மாற்று மொழியாக அதனை கற்க எந்தத் தடையும் இல்லை என்ற நிலை தான் தமிழகத்தில் இருக்கிறது என்பதையும் பதிவு செய்தவர் ஞாநி.

இந்தியும் ஒரு பகுதி மொழி தான்

தமிழை மாநில மொழி என்று அழைப்பதை எதிர்க்கிறோம், ஏனெனில் தமிழ் மாநில மொழி என்றால் அதே போன்று தான் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் ஏன், இந்தி கூட மாநில மொழி தான் என்று உரக்கச் சொன்னவர். மராத்தி, வங்காள மொழி போல இந்தியும் ஒரு பகுதியின் மொழி தான் என்றும் அவர் பேசி இருந்தார்.