வீரியம் மிக்க வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று மருத்துவ ஆராய்ச்சியின் புதிய முடிவுகள் கூறுகின்றன.

அம்மாத்திரைகளை எடுத்துக் கொண்ட முதல் 30 நாட்களில் இதற்கான ஆபத்து அதிகமாக இருக்கும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த கண்டுப்பிடிப்புகள் தெளிவானதாக இல்லை என்றும் மாத்திரைகளை தவிர பிற காரணங்களும் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச விஞ்ஞானிகள், நான்கு லட்சத்து நாற்பத்தி ஆறாயிரத்து எழனூற்று அறுபத்தி மூன்று பேரிடமிருந்து தகவல்களை சேகரித்து மாரடைப்பு எதனால் வருகிறது என ஆராய்ந்தனர்.

இந்த ஆய்வில் வீக்கத்திற்கு எதிரான ஸ்டீராய்ட் கலப்பில்லாத  மருந்துகளை பயன்படுத்தியவர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டது.

விழிப்புணர்வின் அவசியம்

இந்த தகவல்களை ஆராய்ந்த கனடா, ஃபினலாந்து மற்றும் பிரிட்டனைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், இம்மாதிரியான ஸ்டீராய்ட் இல்லாத வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வதால் மாரடைப்பிற்கான ஆபத்துக்கள் அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக, அதை உபயோகிக்கும் முதல் வாரத்திலே கூட அதிக ஆபத்துக்கள் வரக்கூடும் என்றும் குறிப்பாக அதிக டோஸ் மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு முதல் மாதத்திலேயே ஆபத்துக்கள் வர வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாத்திரைகளுக்கும் மாரடைப்பிற்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ள பல விஷயங்கள் தடையாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

வலி நிவாரணிகள்தான் காரணமா?

லண்டன் திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், இந்த ஆய்வு, ஸ்டீராய்ட் அற்ற வலி நிவாரணிகளுக்கும் மாரடைப்பிற்கும் உள்ள தொடர்பை சிறிது எடுத்துக் காட்டுவதாக தெரிவித்தார்.

அதிகபட்சமான நோயாளிகள் மீது இந்த ஆய்வை நடத்திய போதும், இதனை பற்றிய சில அம்சங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை என தெரிவிக்கிறார் அவர்.

மாரடைப்பு வராமல் இருப்பதற்கு வலி நிவாரணிகள் காரணமாக இல்லாமலும் இருக்கலாம் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

“எடுத்துக்காட்டாக, அதிக வலியுடைய ஒருவருக்கு அதிக டோஸ் மாத்திரை பரிந்துரைக்கப்பட்டு அவருக்கு மாரடைப்பு வந்தால், அதற்கு காரணம் வலி நிவாரணியா அல்லது வேறு காரணமா என்று கண்டுப்பிடிப்பது “சற்று கடினம்” என அவர் தெரிவித்தார்.

“அதற்கான காரணம் முழுவதுமாக வேறாக கூட இருக்கலாம்”.

“மேலும் இருதய ஆரோக்கியத்துடன் தொடர்புடைய பிற நோய்களான புகைப்பிடித்தல் மற்றும் அதிக உடல் எடை ஆகியவையும் காரணமாகவும் இருக்கலாம்” என்றும் அவர் தெரிவிக்கிறார்.

நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?

ஸ்டீராய்ட் அற்ற வீக்கத்திற்கு எதிரான மருந்துகளால் இதய பிரச்சனைகளும் வலிப்பும் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருப்பது குறித்து மருத்துவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனின் மருத்துவ வழிகாட்டுதலின்படி, இருதய நோயுள்ளவர்கள் ஸ்டீராய்ட் அற்ற வலி நிவாரணிகளை மிகவும் கவனத்துடன் உபயோகிக்க வேண்டும்; தீவிரமான இருதய கோளாறு உள்ளவர்கள் அம்மாத்திரைகளை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது.

நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் இம்மாதியான அதிக டோஸ் கொண்ட வலிநிவாரணிகளை பயன்படுத்துவதற்கு முன்னதாக அவற்றில் உள்ள ஆபத்துக்களையும் அதன் பயன்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதுவும் குறிப்பாக மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்துக்கள் அதிகம் என்பதை உணர வேண்டும் என பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனைச் சார்ந்த மருத்துவர் ஒருவர் தெரிவிக்கிறார்.

மேலும் இம்மாதிரியான மாத்திரைகளை பரிந்துரைக்கும் முன், நோயாளிகளின் தனிப்பட்ட மருத்துவ நிலையையும், அவர்கள் முன்னதாக பயன்படுத்தி வந்த மருந்துகள் குறித்தும், கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கிப்படுகிறது.

மாற்றுப் பயன்பாடு என்ன?

இந்த ஆய்வில், மருந்து கடைகளில் தானாக மாத்திரைகளை பெறுபவர்கள், தானாக மருந்துகளை வாங்கி உட்கொள்பவர்களை தவிர்த்து, வலி நிவாரணிகள் பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகள் கவனிக்கப்பட்டனர்.

ஆகையால் வலிகளை குறைப்பதற்கு மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஸ்டீராய்ட் அற்ற வீக்கத்திற்கு எதிரான வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்பவர்கள் மத்தியில் இந்த ஆய்வு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே, வீரியம் குறைந்த, ஸ்டீராய்ட் கலப்பற்ற வலி நிவாரணிகளை குறைந்த காலத்திற்கு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இம்மாத்திரைகள் அதிகப்படியாக எடுத்துக் கொண்டால் உடனடியாக மருத்துவர்களை நாட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதன் ஆபத்து எத்தகையது?

எம்மாதிரியான ஆபத்து வரும் என்றும் அல்லது மாரடைப்பு வருவதற்கான அடிப்படை காரணம் எந்தளவு என்பதும் இந்த ஆய்வில் தெளிவாக குறிப்பிடவில்லை.

வலி நிவாரணிகளை சிறிது காலம் பயன்படுத்திய போதும் அதிக ஆபத்திற்கு உள்ளாக கூடும் என்று தெரிவிக்கப்பட்டாலும், அதைப் பற்றிய தெளிவான தகவல் இந்த ஆய்வில் இல்லை என லண்டன் ஹஜுன் மற்றும் டிராபிக்கல் மருத்துவத்திற்கான கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் தெரிவிக்கிறார்.

-நன்றி பிபிசி