மதுரையில் 90 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருத மாநாடு நடைபெற்றது.

அன்றைய சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசர்
பி. ராமராய நிங்கர் மாநாட்டின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

பிராமணர் அல்லாதார் இயக்கமாக உருவெடுத்த நீதிக்கட்சியின் சார்பில் முதல்வரானவர் அவர்.

சமஸ்கிருத மாநாட்டுக்கு அவரை அழைத்த  உயர் சாதியினர் திட்டமிட்டு
தமிழில் பேசுவதைத் தவிர்க்கிறார்கள்.

முதல்வருக்கு சமஸ்கிருதம் தெரியாதே என்ற எண்ணத்தில், பனகல் அரசரைப் பற்றி கேலியும் கிண்டலுமாக சமஸ்கிருத சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. எல்லோரும் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். ஆனாலும் அமைதியாக அமர்ந்திருக்கிறார் பனகல் அரசர்.

நிறைவாக *‘இப்போது முதல்வர் பேசுவார்’ என்று அறிவிக்கப்படுகிறது பனகல் அரசர் தனது பேச்சை ஆரம்பிக்கிறார்.  தமிழில் அல்ல…. தெளிவான சமஸ்கிருதத்தில்! அது வரை பேசியவர்களைவிடச் சிறப்பாக, அவர்களுக்குப் பதில் சொல்வது போல் இலக்கியத் தரம் வாய்ந்த சொற்பொழிவை சமஸ்கிருதத்தில் ஆற்றி முடிக்கிறார். முதல்வரை அவமானப்படுத்த நினைத்தவர்கள் அவமானப்பட்டுப் போகிறார்கள்.

பனகல் அரசர் சமஸ்கிருதத்தில் பட்டப் படிப்பு முடித்தவர் என்ற தகவல் அவர்களுக்குத் தெரியாது.

அந்த மாநாடு முடிந்த சில நாட்களில் ஓர் உத்தரவைப் பிறப்பிக்கிறார் முதல்வர்.

அதுவரை மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் பாடமாக இருந்த சமஸ்கிருதத்தை நீக்கும் உத்தரவு அது.

‘ஆங்கிலத்தில் படிக்கப் போகும் மருத்துவக் கல்விக்கும் சமஸ்கிருதத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என்ற கேள்வி முதல்வருக்கும் எழுந்திருக்கிறது.

சமஸ்கிருதம் தெரிந்தவர்கள்- பட்டவர்த்தனமாகச் சொன்னால் பிராமணர்கள் மட்டும்தான் மருத்துவக் கல்வி படிக்க வேண்டும். மற்றவர்கள் படிக்கக் கூடாது என்ற உணர்வே அதற்குக் காரணம் என்பதை உணர்ந்தார் முதல்வர்.

அதனால் சமஸ்கிருதத்தை நுழைவுத் தேர்வில் இருந்து நீக்குகிறார்.

முதல்வரின் முடிவுக்கு எதிர்ப்பு வருகிறது. மருத்துவக் கல்வியில் தகுதி, திறமை போய்விடும் என்கிற கூப்பாடு எழுகிறது.
அதைப் புறம் தள்ளுகிறார் முதல்வர்.

அதன் பிறகு பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்று நிறைய பேர் மருத்துவக் கல்வி படிக்கிறார்கள்.

இன்று இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவர்களைக் கொண்ட ஊர் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது சென்னை.

வெளி நாட்டினர் கூட இங்கு வந்து இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு போகும் நிலைமை உருவாகியிருக்கிறது.

80 ஆண்டுகளுக்கு முன் பனகல் அரசர் போட்ட உத்தரவு செரியன், சிவசிதம்பரம், அன்பு செல்வன், பொன்னு, சிவக்குமார், நசீர், சாலமன் விக்டர் போன்ற உலகப் புகழ்பெற்ற டாக்டர்கள் உருவாவதற்குக் காரணமாக இருக்கிறது என்றால் அது அதிகபட்சமான வார்த்தையாகாது..!

இப்போ மருத்துவக் கல்வியில் தகுதி, திறமை போய்விடும்னு எழுகிற கூப்பாடு, இன்னைக்கு நேத்து இல்ல…

சமூக நீதியில் நாம் முதல் அடி வைக்கும் போதே வந்துவிட்டது..

NEET ன் தேவை என்னவென்று நம்மை விட அதை கொண்டு வருபவர்களுக்குத் தான் தெரிகிறது என்பது நம் வரலாற்றறிவின் குறைபாடு…!*

நன்றி திரு.வே.மதிமாறன்

Tagged: NEET exams, Brahmin, uppercast, Sanskrit, medical entrance examination, neethi katchi