கீழக்கரையை சார்ந்த வெகு அரிதான முதல் தர கல்வியாளர்கள் வரிசையில் மறைந்த முனைவர் செய்யது எம். ஃபஹ்ருதீன் அவர்கள் முன்னோடியானவர். 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் , கீழக்கரை அம்பலக்காரர் தெருவில் புகழுடன் வாழ்ந்த வணிகப் பெருமகனாரரும், புலவருமான வித்வான் கருத்த சதக்குத் தம்பி மரைக்காயர் அவர்களின் வம்சவழியில் தோன்றிய முனைவர் ஃபஹ்ருதீன் அவர்கள் ஒரு தலை சிறந்த கணித மேதை, கீழக்கரையில் 1936 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் நாள் பிறந்த முனைவர் ஃபக்ருதீன் அவர்கள் தனது சிறுவயதிலேயே கணித ஞானம் மிகுந்தவராக திகழந்தார். மேலும் அல்ஜீப்ரா யாப்பு கணித ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். ஹவாய் பல்கலை கழகத்தின் கணித துறை பேராசிரியராக பல காலம் பணி ஆற்றியவர், கடந்த 1971 ஆம் ஆண்டு, நோத்தேரியன் வளைய சமன்பாட்டின் துல்லிய நேர்கோட்டு தொகுதிகள் (LINEARLY COMPACT MODULES OVER NOETHERIAN RINGS.) குறித்த இவரது திறனாய்வு கட்டுரை, அல்ஜிப்ரா கணித இதழில் வெளியிடப்பட்டது. கடினமான அல்ஜீப்ரா கணித சிக்கல்களை தீர்க்க இவரின் அல்ஜீப்ரா மெய்ப்பாட்டு விளக்கங்கள் இன்றும் உலகம் முழுவதும் கணிதம் பயிலும் மாணவர்களுக்கு பயன்படும் சூத்திரமாக இருப்பதாகவும் அறிய முடிகிறது.

முனைவர் ஃபக்ருதீன் அவர்களின் நூதன கணித ஞானத்தின் வாயிலாக , கணித மெய்ப்பாடுகள் பல உருவாகின. ஒரு மதிப்பீட்டு வளையத்தின் மீதான தொகுதிகள் (MODULES OVER A VALUATION RING) கட்டமைப்பின் மீதான வளையங்கள் (ON TOPOLOGIES OVER RINGS), குவாஸிஸ் கட்டளை தளங்கள் (QUASIS ORDERED FIELDS) பரிமாற்ற வளையத்தின் முழுமையான நம்பிக்கை விரிவாக்கம் (FAITHFULLY FLAT EXTENSIONS OF A COMMUTATIVE RING) ஆகியவை கணிதத் துறையில் குறிப்பிடத் தக்கவை. இத்தகைய தோற்றங்கள், சமன்பாடுகள் குறித்த ஆய்வு முடிவுகள் முனைவர் ஃபஹ்ருதீன் அவர்களின் அபார கணிதத்திறமைக்கு எடுத்துக்காட்டாகும்.

அமெரிக்கா, கனடா, பிரேசில், சவுதி அரேபியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பணியாற்றியவர், புகழ்பெற்ற கிங்ஸ்டன் பல்கலைகழகம் மற்றும் தமாம் பெட்ரோலிய மற்றும் கணிம பலகலைகழகத்தில் கணித துறை பேராசிரியராக திறம்பட பணியாற்றிய அணுபவம் கொண்டவர்,கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடு நிலைப்பள்ளியின் நிர்வாக குழு அங்கத்தினராக செயல் பட்டவர், மட்டுமின்றி கீழக்கரை சமூக நலனில் பெரும் அக்கரை கொண்டவராகவும் இருந்தவர். வரலாற்று ஆய்வுகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர், இவரது இல்லத்தில் அமைத்திருந்த நூலாகத்தில் காலத்தால் மறக்கப்பட்ட அரிய புத்தகங்களை சேகரித்து வைத்திருந்ததாகவும், 1950 களில் டாக்டர் ஹூசைன் நைனார் ஆய்வு செய்து எழுதிய வள்ளல் சீதக்காதி என்ற வரலாற்று நூலை முனைவர் ஃபஹ்ருதீன் அவர்களின் நூலகத்தில் இருந்தே பலர் படி எடுத்தார்கள் என அறிய முடிகிறது.

தாரிக் ரமதான் போன்ற சர்வதேச இஸ்லாமிய எழுத்தாளர்கள்களின் ஆக்கங்களை கூர்ந்து கவனித்து வருபவர் மட்டுமின்றி அதனை தனது நன்பர்களுக்கு பரிந்துரை செய்வது வழக்கம் என்றும் அபுபிலால் அல் கிர்கிரி என்ற புனைப்பெயரில் ஆங்கிலத்தில் பல ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரித்தவர், மேலும் புகழ்பெற்ற மேற்கத்திய இஸ்லாமிய ஆய்வாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் ஃப்ரென்ச் மொழிகளில் வெளிவந்த ஆக்கங்களை பலவற்றினை மொழியாக்கம் செய்து வெளியிட்டவர் என்றும் சுய விளம்பரத்தில் எள்ளளவும் நாட்டமில்லாதவர் முனைவர் ஃபஹ்ருதீன் என்றும் கீழக்கரை இஸ்லாமி பைத்துல்மாலின் துனை செயலாளர் முகம்மது முகைதீன் தம்பி அவர்கள் நினைவு கூறுகிறார்.

முனைவர் ஃஃபஹ்ருதீன் அவர்கள் அன்றைய பெரும் வணிகரும், தலை சிறந்த இஸ்லாமிய அறிஞரும், மதுரை நாலாம் தமிழ் சங்கத்தின் மகாவித்வான்களில் ஒருவருமான ஹாபிலுல் குர்ஆன் அல்லாமா செய்யது முகம்மது ஆலிம் புலவர் அவர்களின் மகள் வயிற்று பேரரும். கடந்த நூற்றாண்டில் கீழக்கரையை சார்ந்த முதல் முதுகலை பட்டதாரி, எம்.எஸ்.ஸி வேதியல் பிரிவு பட்டம் பெற்று, அலிகார் பல்கலை கழகத்தில் பேராசிரியராக பல காலம் பணியாற்றி, கல்வி பணியின் காரனமாக லாகூர் சென்ற பொழுது மறைந்த பேராசிரியர் எஸ்.எம். முகம்மது மஹ்தூம் முகைதீன் அவர்களின் மகனும் ஆவார். முனைவர் ஃபஹ்ருதீன் அவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் நாள் தனது 80 ஆவது வயதில் சென்னையில் காலமானார்கள்.

தன் வாழ் நாளில் இறுதி தருணங்களீலும் கூட கணித துறைக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் பல மெய்பாட்டு விளக்கங்களுக்கான ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டே வந்திருக்கிறார் என்பதை அவரது இறுதி குறிப்பு நூல்கள் அறியமுடிகிறது, உள்ளத்தில் அனையாத ஜோதியாக எரிந்து கொண்டிருந்த கனிதம் குறித்த தேடலே முனைவர் அவர்களை தனது வாழ் நாளில் பெரும்பகுதியை கணித பனிக்கே அர்ப்பனம் செய்ய ஊக்குவித்திருக்கிறது. அன்னாரின் மறைவால் அரிதிலும் அரிதாக காலம் நமக்கு தந்த ஒரு சாதனை படைத்த கல்வியாளரை கீழக்கரை இழந்தது எனில் அது மிகையில்லை.