இங்கு நாம் பார்க்கப்போகும் வழிமுறைகள் உண்மையாகவே நீங்கள் வேலை செய்து சம்பாதிக்கக் கூடிய வழிகள். நியாயமான வருமானத்தை இணையத்தைப் பயன்படுத்திப் பெறுவது எப்படி என்றுதான் நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம். நீங்கள் உங்களுக்கு வரும் மின்னஞ்சலைப் படிப்பதன் மூலமாகவோ, மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ, விளம்பரங்களைச் சொடுக்குவதன் மூலமாகவோ சுலபமாகப் பணம் சம்பாதிக்கலாம் என்று சொல்லப்போவதில்லை.

முதலில் நாம் பார்க்கப்போவது ‘Google Adsense’. இணைத்தளங்கள் வைத்திருக்கும் யாராயிருந்தாலும், தமது தளங்களில் கூகிளுடைய விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வழி இது. கூகிள் விளம்பரங்களை அந்தத் தளங்களில் வெளியிடும் அதே நேரத்தில், உங்கள் தளத்திற்கு வருபவர்கள் தங்களுக்குத் தேவையான தேடுதல்களை மேற்கொள்ளவும் கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) வழி செய்கிறது.

உங்கள் தளம் எதைக்குறித்தது, அதில் வெளியிடப்படும் விளம்பரங்கள் எத்தகையவை, இவற்றின் அடிப்படையில், உங்கள் தளத்தைப் பார்வையிடுபவர் அதில் உள்ள கூகிள் ஆட்சென்ஸ் விளம்பரங்களைச் சொடுக்குகையில் உங்களுக்கு வருமானம் கிடைக்கிறது.

கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) என்றால் என்ன? அது ஏன் உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டும்?

உலகமுழுவதும் உள்ள பல நிறுவனங்கள், கூகிள் தங்களைப்பற்றிய விளம்பரங்களை வெளியிடப் பணம் கொடுக்கின்றன. இது ‘கூகிள் ஆட்வேர்ட்ஸ்’ (Google Adwords) எனப்படுகிறது. கூகிளில் நீங்கள் எதையாவது தேடுகையில் உங்கள் வலப்புறத்தில் நீங்கள் பார்ப்பது இந்த ஆட்வேர்ட்ஸ்தான். இந்த ஆட்வேர்ட்ஸ் (Google Adwords) விளம்பரங்கள், இணையத்தைப் பயன்படுத்துவோரால் சொடுக்கப்படுகையில், கூகிளுக்கு வருமானம் கிடைக்கிறது. இந்த விளம்பரங்களை, உங்கள் தளத்திலும் வெளியிடுவதன் மூலம், கூகிளுக்குக் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கிறது. அதில் ஒரு பகுதி, உங்களுக்கு (அதாவது இணைத்தளத்தின் உரிமையாளர்களுக்கு) பகிர்ந்தளிக்கப்படுகிறது.

கூகிள் ஆட்சென்ஸில் (Google Adsense) உறுப்பினராவது எப்படி?

உங்களுக்கென்று ஒரு இணைத்தளம் மட்டும் இருந்தால் போதும். கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) விளம்பரங்களை வெளியிடுவது இலவசம்தான். இதற்காக கூகிள் நிறுவனத்திற்கு நீங்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. கூகிள் ஆட்சென்ஸ் கூறும் விதிமுறைகளின் படி உங்களது இணைத்தளமானது இருக்கவேண்டும். தகுதி அளவீடுகளைப் பூர்த்தி செய்யவேண்டும். இவை இரண்டும் இருப்பின் நீங்கள் உங்கள் இணைத்தளத்தில் கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) விளம்பரங்களை வெளியிட விண்ணப்பிக்கலாம்.
அந்நிறுவனம், உங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலித்து, உங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என முடிவு செய்யும். நீங்கள் விண்ணப்பித்த ஒரு வார காலத்துக்குள் அனேகமாக, உங்கள் விண்ணப்பம் ஏற்கவோ, நிராகரிக்கவோ படலாம். உங்கள் விண்ணப்பம் ஏற்கப்படின், நீங்கள் கூகிள் ஆட்சென்ஸ் கணக்கைத் தொடங்கலாம். பின்னர், உங்களுக்கு ஒரு ‘HTML Code’ வழங்கப்படும். அக்குறியீட்டு எண்ணை, உங்களது தளங்களில் நீங்கள் பயன்படுத்தினால், கூகிள் தன்னிடம் உள்ள சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்கள் தளத்தின் தலைப்பு, அதன் உள்ளடக்கம் இவற்றுக்குத் தொடர்புடைய விளம்பரங்களை உங்கள் தளத்தில் காட்சிப்படுத்தும். ஒரு சொடுக்கலுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது கூகிளுக்கு மட்டுமே தெரிந்த இரசியம். அது ஒரு சென்ட் ஆகவும் இருக்கலாம், பத்து டாலராகவும் இருக்கலாம்.

கூகிள் ஆட்சென்ஸ் கூறும் விதிமுறைகள் என்னென்ன?

1. உங்களுக்கு என்று ஒரு இணைத்தளமோ (Website), வலைப்பூவோ (Blogspot) இருக்கவேண்டும். இது வரை இல்லையென்றால் இனிமேல் நீங்கள் ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். (ஆனால், சில நேரங்களில் உங்கள் இணைத்தளம் அல்லது வலைப்பூ உருவாகி ஆறுமாதமாவது ஆனால்தான்,கூகிள் ஆட்சென்ஸ் கணக்கைத் துவக்க முடியும். குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தளங்கள்.)

2. உங்கள் வயது பதினெட்டுக்கு மேற்பட்டிருக்கவேண்டும்.

3. கூகிள் ஆட்சென்ஸ் நிறுவனத்தின் சில நெறிமுறைகளை மீறாமல் இருக்கவேண்டும். (இவற்றை விரிவாகப் பின்னர் காணலாம்.)

உங்கள் கணக்கைத் துவக்குவது எப்படி?

முதலில் கூகிள் ஆட்சென்ஸுக்கு நீங்கள் உறுப்பினராவதற்காக விண்ணப்பிக்கவேண்டும். உங்கள் முழுப்பெயர் (உங்கள் சான்றிதழ்களில், உங்கள் வங்கிக்கணக்கில் உள்ளபடி), உங்கள் முழு முகவரி, உங்கள் இணைத்தளத்தின் முகவரி (URL), இவை அனைத்தையும் கொடுக்கவேண்டியிருக்கும். கூகிளின் விதிமுறைகளை மீறமாட்டேன் என்ற உறுதிமொழி கொடுக்கவேண்டும். உங்கள் தளம் கூகிளின் நெறிமுறைகளை மீறாமல் இருப்பின், உங்களுக்கு முன்னால் கூறியபடி ஒர் எண் கொடுக்கப்படும். உங்கள் தளத்துக்கு வருபவர்கள் மட்டுமே விளம்பரங்களைச் சொடுக்கவேண்டும். நீங்களே உங்கள் விளம்பரங்களைச் சொடுக்கினால் அது விதிமுறை மீறல். அப்படிச் செய்பவர்களின் கணக்கை கூகிள் ஆட்சென்ஸ் முடக்கிவிடும்.

உங்கள் கணக்கில் பத்து டாலர்கள் சேர்ந்தபின், உங்கள் முகவரியைச் சரிபார்க்கும் விதமாக, கூகிள் உங்களுக்கு PIN எண்ணை தபால் மூலமாக அனுப்பும். அந்த எண்ணை நீங்கள் உங்கள் கணக்கில் பதிவு செய்தல் மூலம் உங்களுடைய முகவரி சரிபார்க்கப்படுகிறது. கூகிளில் இருந்து நீங்கள் பணப்பட்டுவாடா ஆக இது அவசியம்.

ஒவ்வொரு முறையும் உங்கள் கூகிள் கணக்கில் குறைந்தபட்சமாக 100 டாலர்கள் சேர்ந்தபின், உங்களுக்கு ‘கூகிள் நிறுவனத்தில் இருந்து காசோலை அனுப்பப்படும். ஆனால் உடனடியாக அல்ல. உங்கள் கணக்கில் மார்ச் மாதம் 20ம் நாள் இருப்புத்தொகை நூறு டாலர்களைத் தாண்டினால், அது பரிசீலிக்கப்பட்டு, (விதிமுறை மீறல்கள் உள்ளதா இல்லையா என்று), ஏப்ரல் மாதம் கடைசியில் உங்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படும். உங்கள் பணம் கைக்கு வர மே மாதம் 10 முதல் 15 தேதி ஆகிவிடக்கூடும். நீங்கள் கூகிள் ஆட்சென்ஸ் கணக்கைத் துவக்குகையில் கொடுத்த முகவரிக்குக் காசோலை அனுப்பப் படும்.

கூகிள் ஆட்சென்ஸ் விதிமுறைகள் என்னென்ன?

1 .உங்கள் தளத்தில் உள்ள விளம்பரங்களை நீங்களே சொடுக்குதல் கூடாது.
2.அதே போல், நீங்களே உங்கள் தளத்திற்கு வருபவர்களை, விளம்பரங்களைச் சொடுக்குமாறு கூறுதல், உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலம் விளம்பரங்களைச் சொடுக்கச் செய்தல் இவையும் நெறிமுறைகளுக்குப் புறம்பானவை.
3 .உங்கள் தளத்திற்கு வருபவர்களுக்கும், விளம்பரங்களைச் சொடுக்குபவர்களுக்கும் சரியீடு செய்தல், விளம்பரங்களுக்குப் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு, விளம்பரங்களைச் சொடுக்க வகை செய்தல்
இவையும் நெறி முறைகளை மீறியவையே! இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுடைய கணக்கை கூகிள் ஆட்சென்ஸ் முடக்கிவிடக்கூடும். உங்கள் தளம் ஆபாசம், வன்முறை, இன,மொழி, நிற வெறிகளைத் தூண்டுவதாக இருப்பின், உங்கள் தளத்தை கூகிள் ஆட்சென்சுக்குப் பயன்படுத்த முடியாது.

குறிப்பு : தமிழ் வலைத்தளங்கள் வைத்திருப்போர் சிறிய மாற்றங்கள் செய்வதன்மூலம் கூகுளின் விளம்பரத்தை காட்ட முடியும் ஏனென்றால் கூகுளை ஆங்கிலத்தில் இருப்பதால் தமிழை கண்டுகொள்ளாது ஆகவே கட்டுரைகள் முடிவில் சில ஆங்கில வார்த்தைகள் எழுதுவதன்மூலம் இதை நிவர்த்திசெய்யலாம்.

Tagged: Google Adsense, Earn money with advertisements, Google Ads, Website Advertisements, Blogger, Blogspot, Google Adwords, Online Tips and Tricks