உங்கள் குழந்தைகளை நீங்கள் நேசிக்கிறீர்களா? ஆம், என்றால் அந்த நேசத்தை இதுவரை நீங்கள் உங்களது குழந்தையிடம் எப்படியெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். அது ஒரு விலையுயர்ந்த சாக்லெட் பாராக இருக்கலாம், புத்தம் புதிய கவுனாக இருக்கலாம், பிராண்ட் நியூ பொம்மைகளாக இருக்கலாம். வார இறுதி டூராக இருக்கலாம். குறைந்த பட்சம் தெரு முக்கில் இருக்கும் ஐஸ்கிரீம் பார்லர் அல்லது பீட்ஸா கார்னர் விஸிட்டாகக் கூட இருக்கலாம். எப்படியோ ஏதாவது ஒரு விதத்தில் நாம் நமது குழந்தைகளின் பால் நமக்குள்ள அளப்பரிய நேசத்தை ஒவ்வொரு நிமிடமும் நிரூபித்துக் கொண்டே இருக்கவேண்டியவர்களாகவே இருக்கிறோம்.

குழந்தை வளர்ப்பு ஒரு கலை என்றால், அந்தக் கலையில் பெற்றோர்… குழந்தைகள் பால் தமக்குள்ள நேசத்தை வெளிப்படுத்துவதென்பது மற்றுமொரு நுண்கலை என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைச் மிகச்சிறப்பாக கற்றுக் கொண்டு வெளிப்படுத்தும் பெற்றோர் மற்றவர்களை எப்போதும் உருக வைத்து விடுகிறார்கள்.

இதோ இந்த தந்தையைப் பாருங்கள், ஆட்டிசக் குறைபாடால் பாதிக்கப்பட்ட தனது 10 வயதுக் குழந்தைக்கு அவர் அளித்த மதிப்பெண்களைக் கண்டு இன்று இணையம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது இந்தத் தந்தையை.

அந்தத் தந்தையின் பெயர் ஷேன் ஜாக்ஸன். அவரது மகள் லிட்டில் ஷோஃபிக்கு 10 வயது. பிறந்தது முதலே சோஃபிக்கு  ‘ஆட்டிஸ்டிக் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர்’ பாதிப்பு இருப்பதால் பிற குழந்தைகளைப் போல அவளால் எளிதில் பாடங்களைப் புரிந்து கொள்ளவோ அல்லது பள்ளி போன்ற பொது வெளியில் பிற மாணவர்களுடன் எளிதில் கலந்து பழகி நட்பு கொள்ளவோ முடியாத நிலை. கல்வியிலும் பழக்க வழக்கங்களிலும் தான் இந்தத் தடையே தவிர இத்தகைய குழந்தைகளுக்கு கலைகளைக் கற்றுக் கொள்வதில் எவ்விதத் தடைகளும் இருப்பதில்லை. சொல்லப்போனால் பிற சாதாரண குழந்தைகளைக் காட்டிலும் இந்தகைய பிறவிக் குறைபாடுகளைகளுடன் இருக்கும் குழந்தைகளுக்குத் தான் நுண்கலைகளைக் கற்பதிலும், சிறப்புர வெளிப்படுத்துவதிலும் அதீதத் திறன் உண்டு என்பது அனைவரும் ஒப்புக் கொண்ட நிதர்சனம். அந்த வகையில் லிட்டில் சோஃபிக்கு கலைகள் மீதான ஈர்ப்பு அதிகம். அவளொரு மிகச்சிறந்த ‘ஆர்டிஸ்ட்’ என்கிறார் அவளது அப்பா ஜாக்ஸன்.

சமீபத்தில்… சோஃபிக்கு பள்ளியில் தேர்வு நடந்தது. அதற்கான ரிப்போர்ட் கார்டை ஆசிரியை சோஃபியிடம் அளித்து பெற்றோருக்கு காட்டச் சொல்லியிருக்கிறார். சோஃபிக்கோ துயரம் சொல்லி மாளாது. ஏனெனில், அவள் அத்தனை பாடங்களிலும் ‘D’ கிரேடு தான் பெற முடிந்தது. அவளுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. அழுது கொண்டே, தன் தந்தையிடம் தனது ரிப்போர்ட் கார்டைக் காட்டினாள். மகளின் கண்ணீரைக் கண்டு உருகிப் போன ஜாக்ஸன், அவளை ஆறுதல் படுத்தும் விதமாக, அழாதே மகளே… இரு உனக்கு இப்படியொரு ரிப்போர்ட் கார்டு அளித்தவர்களை எல்லாம் நான் உனக்கு அளிக்கும் புது ரிப்போர்ட் கார்டு மூலமாக வெகு நிச்சயமாகக் கீழிறக்குகிறேன், பார். என்று கூறியதோடு நில்லாமல், மகளுக்காக ஒரு புது ரிப்போர்ட் கார்டையும் தயார் செய்தார்.

அந்த ரிப்போர்ட் கார்டில் ஜாக்ஸன் மதிப்பெண்கள் அளித்து தரம் காண நினைத்தது பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கு அல்ல;

தன் மகளின் வாழ்வை இதுவரையிலும், இனிமேலும் ஒளிமயமானதாக ஆக்கவிருக்கும் அவளது நற்பண்புகளுக்கு.

இதோ அந்தப் பாசமான தந்தை, தன் மகளுக்கு அளித்த ரிப்போர்ட் கார்டை நீங்களும் கூட பாருங்களேன்…

 

இப்படியொரு ரிப்போர்ட் கார்டை மகளுக்கு அளித்ததோடு, அதை இணையத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘DAD’S REPORT CARD’ என்று தலைப்பிட்டு பகிர்ந்திருக்கிறார் ஷேன் ஜாக்ஸன்.

மகள் மீதான ஜாக்ஸனின் நேசத்துக்கும் அவரது ரிப்போர்ட் கார்டுக்கும் ட்விட்டரில் ஏக வரவேற்பு. ஜாக்ஸனின் இந்த ட்விட் 12,000 முறைகள் பகிரப்பட்டு 65,000 லைக்குகளைப் பெற்றுள்ளது. ட்விட்டரில் அவருக்கு கருத்துரையிடும் ட்விட்டரட்டிகளில் பலரும்… ஜாக்ஸனின் ட்விட் மூலமாகத் தாங்களும் தங்களுடைய ஆட்டிஸ பாதிப்புள்ள குழந்தைகளை மேலும் எவ்விதமாகவெல்லாம் உற்சாகப்படுத்தலாம் என்று யோசிக்க இந்த ட்விட் தூண்டலாக அமைந்திருப்பதாக பாராட்டித் தள்ளுகிறார்கள்.

மகளின் ரிப்போர்ட் கார்டுக்கு கிடைத்த வரவேற்பால் அகமகிழ்ந்து போன ஜாக்ஸன் தற்போது, தன் மகள் லிட்டில் சோஃபிக்காக என்றே பிரத்யேகமாக ஒரு ட்விட்டர் கணக்கைத் தொடங்கி விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இனி லிட்டில் சோஃபி தனது நுண்கலைத்திறமைகளை வெளிப்படுத்த அந்த ட்விட்டர் கணக்கை பயன்படுத்துவார் என ஒரு அன்பான தந்தையாக ஜாக்ஸன் மகளின் ட்விட்டர் கணக்கை தனது ஃபாலோயர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

விருப்பமிருப்பவர்கள் அங்கே சென்று லிட்டில் சோஃபியின் திறமையைப் பாராட்டலாம்.

ஒரு காலத்தில் ஆட்டிஸம், டிச்லெக்ஸியா என்றால் என்னவென்றே தெரியாமல் குழந்தைகள் கல்வியில் மந்தநிலையில் இருந்தால் அவர்களை அவர்களின் குறைபாட்டின் அடிப்படையில் புரிந்து கொள்ள முயலாமல் பெற்றோர் அப்படிப்பட்ட குழந்தைகளை வார்த்தைகளாலும், செயலாலும் வதைக்கும் போக்கு உலகெங்கும் பரவலாக இருந்து வந்தது. இன்று அந்த நிலை மாறி பெரும்பாலான பெற்றோர் தத்தமது குழந்தைகளின் கற்றல் திறனிலோ அல்லது பிறருடன் பழகும் திறனிலோ தடைகள் இருப்பதைக் கண்டால் அதற்கான காரணம் ஆட்டிஸம் அல்லது டிஸ்லெக்ஸியாவாகவும் இருக்கலாம் என்று யோசிக்க முன்வருவது குழந்தை வளர்ப்பில் மிகப்பெரிய முன்னேற்றம். அப்படியே குறைபாடுகள் ஏதாவது இருப்பினும் அதற்கான சிகிச்சைமுறைகளைத் தெரிந்து கொண்டு அந்தக் குழந்தைகளை பிற குழந்தைகளுக்கு இணையாக ஊக்கப்படுத்தி சமூகத்தில் அவர்கள் எந்த நிலையிலும் பிறர் முன்னிலையில் தாழ்வாக உணராதவாறு அவர்களைப் பக்குவமாகக் கையாள்வது மிகப்பெரிய கலை. அதற்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும் மட்டுமல்ல குழந்தைகள் பாலான நேசமும் மிக முக்கியம்.

ஜாக்ஸன் அப்படிப்பட்ட தந்தைகளில் ஒருவராக இருப்பது லிட்டில் சோஃபியின் அதிருஷ்டம்.

வாழ்த்துக்கள் தந்தைக்கும்… மகளுக்கும்!