‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்,’ என்றார் வள்ளலார், அன்று. ஆனால், மானிட உயிரை கண்டதும் பகையால் பழிவாங்க துடிக்கின்றனர், இன்று. அன்பையும், அகிம்சையையும் கீழே வைத்துவிட்டு ஆயுதங்களை கையில் எடுக்கின்றனர். புத்தரின் போதனைகள் புறந்தள்ளப்பட்டதாலும், காந்திய கொள்கைகள் காணாமல் போனதாலும் சத்தியத்தின் வழி நடப்போர் சங்கடங்களை சந்திக்கின்றனர். மன்னன் ஒருவன் ஒரு மகானிடம் சென்று, ‘எல்லாம் இருந்தும் என் அன்புத்திருநாடு துன்பக்காடாக மாறியிருப்பது ஏன்?,’ என கேட்டிருக்கிறான். அதற்கு, “உன் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. உன் நாட்டிலுள்ள மக்கள் அன்பினை துறந்து ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டிக்கொள்வதே துன்பத்திற்கு காரணம்,” என்றிருக்கிறார் அந்த மகான்.

யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என்றிருந்த பூமியில் இன்று கூலிப்படை தோன்றியிருக்கிறது. வேதம் பிறந்த மண்ணில் பயங்கரவாதம் தலைதுாக்கியிருக்கிறது. பிள்ளைகளை பெற்றோர் பள்ளியில் சேர்க்கும் போது முதல் நாளன்று பள்ளி வாசலில் நின்று பிள்ளைகள் பெற்றோரை பார்த்து கண்ணீர் சிந்துவர். ஆனால் முதுமையில் அவர்களை முதியோர் இல்ல வாசலில் நின்று பிள்ளைகளை பார்த்து மனதிற்குள் வருந்தி கண்ணீர் வடிக்கின்றனர்.

இதுபோன்ற சிக்கல் நிறைந்த வாழ்வின் சீற்றங்களை சீர்படுத்தி நம்மை நெறிப்படுத்த தேவையான அன்பான அணுகுமுறைகள் நமக்கு தேவை.

அன்பின் வழி : கோயில் விழா ஒன்றில் கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவு நடந்தது. அப்போது பெண்கள் பகுதியிலிருந்து இரைச்சலுடன் கூடிய சப்தம் கேட்டு கொண்டேயிருந்தது. இது வாரியாரின் சொற்பொழிவுக்கு இடையூறாக இருந்தது.
உடனே வாரியார் வெகுண்டெழுந்து அவர்களை திட்டவில்லை. மாறாக “பெண்மணிகளல்லவா, அதனால் தான் ஓசை அதிகமாக உள்ளது,” என அவருக்கே உரித்த சிலேடை பாணியில் இருபொருள்பட நயமாக கூறியதும் சப்தம் அடங்கி விட்டது.

மணி என்பது ஓசை எழுப்ப கூடியது என்பதை இவ்வாறு கையாண்டு கோபம் கொள்ளாமல் அன்பான வார்த்தைகளால் அமைதிப்படுத்தியிருக்கிறார். சாத்வீகம் என்பது எந்த சந்தர்ப்பத்தையும் சம்பந்தப்பட்டவர்க்கே சாதகமாக்கி விடுகிறது.

மரங்கள் இல்லாத மணற்பரப்பில் கோடை வெயிலில் இரண்டு மான்கள் வந்து கொண்டிருந்தன. ஆண் ஒன்று, பெண் ஒன்று. வெயிலின் தாக்கத்தால் இரண்டும் தவித்தன. தான் வருந்தினாலும் பரவாயில்லை என்று தன்நிழலில் பெண்மானை படுக்க வைத்து இளைப்பார வைத்ததாம் ஆண்மான்; இதனை”இந்நிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்கு
தன் நிழலைக் கொடுத்தளிக்கும் கலை” என்று கலிங்கத்துப்பரணி பாடலொன்று கூறுகிறது.

ராமகாவியத்தில் இறுதியாக ராமபிரான் வெற்றி பெற்று அயோத்தியில் அரியணை ஏறியதற்கு பெரும்பாலான கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் அன்பினால் இணைந்து நிற்பதும் ஒரு காரணம் என சொல்லப்படுவதுண்டு.பரதனும், இலக்குவனும் ராமன் மீது வைத்திருந்த அன்பு. ராமன் தந்தை தசரதன் மேல் வைத்திருந்த பக்தி. தசரதன் ராமன் மீது வைத்திருந்த பாசம். அனுமனின் ராமன் மீதான பணிவு இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை உணர்வு அன்பே. அன்பு எனும் கடலில் அடுத்தடுத்து வரும் அலைகளே பாசம், பரிவு, பணிவு, பக்தி, நேசம், கருணை என்பவைகளெல்லாம்.இந்த அலைகள் தொடர்ந்து வருவது தடுக்க முடியாதது. பசியால் வாடுவோருக்கு உணவு கொடுப்ேபாரே உயிர் கொடுப்போர் என்பதை “ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் அரும்பசி களைவோர், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்கிறது மணிமேகலை காப்பியம்.

‘இந்த உலகிலுள்ள மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அன்பு நிறைந்தவர்களை எங்கே எப்போது சந்திக்க போகிறோம் என்பது தான். வருத்தம் என்னவென்றால் எப்போது பிரியப் போகிறோம் என முன்கூட்டியே தெரியாமலிருப்பது தான்,’ என தீபம் நா.பார்த்தசாரதி தனது ‘பொன் விலங்கு’ எனும் நுாலில் அன்பின் இழப்பை குறிப்பிடுகிறார்.

நல்ல மனம் வாழ்க : வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் வறுமையினால் ஒரு வீட்டில் பாத்திரங்கள் தேய்த்து கழுவும் வேலை பார்த்து வந்தார். அவர் பாத்திரங்கள் தேய்த்து முடித்து சென்றதும் அந்த வீட்டுப் பெண் திரும்பவும் அந்த பாத்திரங்களை தண்ணீர் விட்டுக் கழுவி சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.இதை பக்கத்து வீட்டு பெண் ஒருநாள் பார்த்துவிட்டு இப்படியுமா செய்வார்கள். அந்த வயதான வேலைக்காரம்மாவின் கை பட்டுவிட்டதால் திரும்ப சுத்தம் செய்கிறாரே என்று வருத்தப்பட்டிருந்த அந்த பெண், ஒரு நாள் நேரிலேயே வீட்டுப் பெண்ணிடம் “இப்படி நீங்கள் செய்யலாமா, பாவமில்லையா” என கேட்டு விட்டார். அதற்கு அப்பெண், “நான் வேலைக்காரம்மாவின் கைபடுவதால் திரும்பவும் பாத்திரங்கள் கழுவவில்லை. அவரது முதுமை காரணமாக பாத்திரங்களை அழுத்தி தேய்த்து அவரால் சுத்தம் செய்யமுடியவில்லை. நான் நினைத்தால் அந்தம்மாவை வேலையில் இருந்து நீக்கிவிட முடியும். ஆனால் அப்படி செய்ய விரும்பவில்லை. ஏனென்றால் இந்த சம்பளமும் கிடைக்காவிட்டால் மிகவும் சிரமப்படுவார் என்பதால் அவரால் முடிந்த அளவிற்கு வேலை செய்யட்டும் என்று தான் நான் திரும்பவும் சுத்தம் செய்துகொள்கிறேன்,” என்று பதில் சொல்லியிருக்கிறார்.
இதுபோன்ற பரிவுள்ள மனிதர்கள் தான் பிறரின் வேதனை தீர்ப்பவர்கள், விழிகளில் நிறைந்தவர்கள் எனப்படுவர்.

அன்பு நெறி: தாய் பாசத்தை போன்றதே தாய் நாட்டுப்பற்றும், தாய் மொழிப் பற்றும் என்பதை ‘பிறந்த நாடே சிறந்த கோயில், பேசும் மொழியே தெய்வம்,’ என்கிறார் கவிஞர் பூவைசெங்குட்டுவன். ரயில் நிற்காத ரயில் நிலையமும், இரக்கமில்லாத இதயமும் பயனற்றது என்பதை
‘இறைவனில்லா ஆலயத்தில்ஏற்றி வைத்த தீபம்இரவு பகல் எரிவதனால்எவருக்கென்ன லாபம்’
என்கிறார் கவிஞர் வாலி.கண்களின் கருணையும், இதயத்தின் இரக்கமும் கயவர்களையும் மாற்றவல்லது என்பதை’கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்’என்றார் கவியரசர்.
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர் நின்ற உடம்பாகும் என்பதை ‘அன்பின் வழியது உயிர்நிலை,’ என்கிறார் திருவள்ளுவர்.

தாயன்பு : நிறைய குடித்துவிட்டு தினமும் வீட்டிற்கு வரும் மகனிடம் தாய் கேட்கிறாள், “ஏன் இப்படி குடித்து உடம்பை கெடுத்துக்கொள்கிறாய், இது நம் குடும்பத்திற்கு தேவையா. நீ திருந்த மாட்டாய், நான் இனி உயிருடன் இருக்க விரும்பவில்லை,” என கூறி கையில் மறைத்து வைத்திருந்த விஷ பாட்டிலை திறக்கிறாள். பதறிப்போன மகன், “நீ ஏன் இறக்க வேண்டும். நான் தான் தவறானவன். நானே வாழக் கூடாதவன்,” என கூறி அந்த விஷ பாட்டிலை பறிக்க முயலும்போது விஷ பாட்டில் தவறி கீழே விழுந்து உடைகிறது. இருவரும் திகைத்து நிற்கிறார்கள்.

தாயின் பாசத்தை நினைத்து சிந்தித்துக்கொண்டிருந்தவன் சிறிது நேரம் கழித்து தன் தாயிடம், “இந்த கடவுளுக்கு இரக்கமே இல்லை,” என்கிறான். அப்போது “கடவுளை அப்படியெல்லாம் சொல்லக் கூடாது,” என்கிறாள் அம்மா. “எனக்கு ஒரு நல்ல அம்மாவை கொடுத்த கடவுள் உனக்கு ஒரு நல்ல மகனை கொடுக்கவில்லையே. இது வஞ்சகம் இல்லையா,” என மகன் சொல்லியதும், “உன்னை காப்பாற்றுவதற்கே என்னை படைத்துள்ளார் கடவுள்,” என தாய் சொல்லியதை கேட்ட மகன் அன்றோடு மதுப் பழக்கத்தை நிறுத்தியுள்ளான்.

அன்பே தெய்வம் : அன்பு என்பதன் பொருள் பாசம், நேசம் இவைகளின் பரிமாற்றம் என்பது மட்டுமல்ல; பிறர் மீது பொறாமையின்மை, விரோதமின்மை போன்றவைகளும் அன்பின் இன்னொரு பக்கமே. ‘சோஷியல் ஸ்டிக்மா’ எனும் சமூகக் களங்கம் இல்லாத நல்மரபுகளையும், பழக்கங்களையும் அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்லாததால் அல்லது கொண்டு செல்ல முடியாததால் ஏற்படும் இழப்பினை ‘தலைமுறை இடைவெளி’ என சொல்வார்கள்.

ஈகோ இல்லாமை, சகமனிதனிடம் நட்பு பாராட்டுதல் போன்றவை தலைமுறை இடைவெளியின் இழப்புக்களை ஈடு செய்ய உதவும். ஆணவம் எனும் அரக்கனை அடக்கும் சக்தி அன்பின் வலிமைக்கு இருக்கிறது. கண்ணீர் புகை வீச்சுக்கு கட்டுப்படாத கலவரம் கனிவான பேச்சுக்கு கட்டுப்படுவதுண்டு. சண்டையிடுவது வீரமல்ல; சமாதானம் பேசுவது கோழைத்தனமும் அல்ல என்பார்கள்.எனவே அமைதியெனும் பூங்காவில் அன்பெனும் மணமுள்ள மலர்களை என்றும் வளர்ப்போம்.

– ஆர். சுகுமார்
நில அளவைத்துறை ஓய்வு அதிகாரி, சிவகங்கை.

-தினமலர்