திப்பு சுல்தானை பொறுத்த வரை, அவர் வெறும் கர்நாடகாவை சேர்ந்தவர் மட்டுமல்ல. திப்பு கன்னட மொழி பேசும் மக்களுக்கு மட்டுமே உரித்தான மன்னனல்ல. தமிழகத்தின் மேற்கு நிலப் பகுதியான கொங்கு மண்டலத்தின் பெரும் பகுதியையும், வடக்கு நிலப்பகுதியின் பெரும் பகுதியை திப்பு சுல்தான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.

ஹதர் அலிக்கும், திப்பு சுல்தானுக்கும் தமிழ் பேசத் தெரியும். குறிப்பாக திப்புவுக்கு தமிழ் பேசவும், எழுதவும் தெரியும். கூடுதலாக ஃபிரெஞ்ச் மொழியும் திப்பு சுல்தானுக்கு தெரியும். தனது நூலகத்தில் முக்கியமான ஃபிரெஞ்ச் மொழி அறிவுச் செல்வங்களை திப்பு சுல்தான் வைத்திருந்தார்.

திப்பு சுல்தானின் தந்தையான ஹைதர் அலி குதிரைப்படை தலைவராக இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களை பயன்படுத்தி மைசூர் மன்னராக உயர்ந்தவர். சாதாரண பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்துவளர்ந்த திப்பு சிறுவயது முதலே ஏராளமான நூல்களை படிக்கக் கூடியவராக இருந்துள்ளார். அந்த கால உலகின் பெரும்பகுதி அறிவுச்செல்வங்களை அறிந்தவராகவும், பரந்து விரிந்த மனப்பான்மை கொண்டவராகவும்,  சூஃபி மரபின் சமத்துவ நோக்கை கைக் கொண்டவராகவும் இருந்தார்.

முக்கிய சீர்திருத்தங்களும், பொருளாதார வளர்ச்சியும்:

ஹைதர் அலி நடைமுறை ரீதியில் எதிர்கொண்ட பிரச்சனைகளை தீர்க்கும் முயற்சிகளை, குறிப்பாக காலனிய வெள்ளை அதிகாரத்துக்கு எதிராக மக்களை திரட்டும் நடவடிக்கைகளை திப்பு சுல்தான் மிகவும் விரிவுப்படுத்தினார்.

இத்தகைய திட்டங்களை முக்கியமானது, ஆற்று நீரை விவசாயத்திற்கு முறையாக பயன்படுத்துவது. காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டும்போது முதலில் அறிவித்தது என்னவெனில் தடுப்பணை கட்டுமானத்தில் பங்கேற்போருக்கு குறிப்பிட்ட அளவு நிலம் சொந்தம் என அறிவித்தது. நில பிரபுத்துவத்திற்கு எதிராக கடுமையான முதல் தாக்குதல்களை பொருளாதார ரீதியில் தொடங்கியது திப்பு அரசு.

பொருளாதார சீர்திருத்தங்களின் குறிப்பிட வேண்டிய முக்கியமான அம்சம், கிராமங்களின் பொது நிலங்களில் பழ மரங்கள், புளிய மரங்களை முதன்முதலில் நட்டு வளர்த்தனர். மேட்டு நிலங்களில் இத்தகைய தன்மையை முதன்முதலில் உருவாக்கியதே திப்பு சுல்தான் தான். மேட்டு நிலங்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்வதற்காக பொது நீராதாரங்களை உருவாக்கி, கிராமத்தின் தேவையை நிவர்த்தி செய்ய பொதுநிலத்தில் பொருளாதார பணவித்துகளை உருவாக்கியவர்.

உள்நாட்டு பயன்பாட்டுக்கு தேவையான பல்வேறு கைவினை பொருட்களை உருவாக்கவும், தேவைக்கு அதிகமான உற்பத்தியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யவும் சுல்தான்பேட்டைகளை உருவாக்கினார். உள்நாட்டு வணிகத்தையும், வெளிநாட்டு வணிகத்தையும் சீரானதாக முறைபடுத்தி முன்னோடியாக திகழ்ந்தார்.

மத நல்லிணக்கவாதி :

சூஃபி மரபுகளால் கவரப்பட்டும், ஃபிரெஞ்சு புரட்சியின் மரபுகளாலும் கவரப்பட்டும் தனது பெயருக்கு முன்னான சுல்தான் பதவியை துறந்து “குடிமகன் திப்பு” எனும் பொருள்படும் பட்டத்தை சூட்டிக் கொண்டார். மத ரீதியில் பார்த்தால், சமத்துவத்தை போதித்த குழுக்களான சூஃபிக்களை ஆதரித்தனர். ஆதி சங்கரரால் உருவாக்கப்பட்ட சிருங்கேரி மடத்தை ஆதரித்ததுடன், இந்து மத பெண் தெய்வ உருவம் பொறித்த தங்க காசுகளையும் வெளியிட்டு சிறப்பித்தார்.

எந்த சாதியை சேர்ந்தவரானாலும் நிலம் வைத்துக் கொள்ளும் உரிமையை வழங்கிய திப்பு சுல்தான் உழுபவருக்கே நிலம் என்ற கோஷத்தை உயர்த்திப் பிடித்தார். தனது ராணுவத்தை சேர்ந்த 3 லட்சம் பேருக்கு நிலங்கள் வழங்கினார்.

நீதிக்காக தளபதியையே சுட்டுக் கொன்றவர் :

“யுத்தத்தை போர் களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள், அப்பாவி மக்கள் மீது ஒரு போதும் வன்முறை நடத்தாதீர்கள். பெண்களை கண்ணியத்தோடு நடத்துங்கள்.” என்றுக் கூறி அதற்கேற்ப வாழ்ந்தவர் திப்பு சுல்தான். மைசூருக்கும் பெத்தநல்லூருக்கும் இடையே நடத்த போரில் சரணடைந்த பெத்தநல்லூர் ராணி மற்றும் அரண்மனை பெண்டீரை, போர் விதிகளை மீறி கைது செய்ய எத்தணித்த தனது படை தளபதியையே சுட்டுக் கொன்றார் அப்போது இளவரசராக இருந்த திப்பு சுல்தான்.

திப்பு மற்றும் ஹைதரின் படைகளில் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் பணியாற்றி உள்ளனர். திப்புவின் குதிரைப்படையில் தீரன் சின்னமலை உள்ளிட்ட ஏராளமான தமிழர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மண்ணில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய முழக்கங்களை முதன்முதலில் உயர்த்திப்பிடித்தவர் திப்பு சுல்தான் என்பது ஜனநாயகவாதிகள் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம்.

ஏவுகணை தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடி :

ஏவுகணை தொழில்நுட்பத்தை போரில் பயன்படுத்தியதில் உலகின் முன்னோடியாக திகழ்ந்தவர் திப்பு சுல்தானே. திப்புசுல்தானின் இந்த சாதனையை இன்றும் உலகம் நினைவுகூர்கிறது. திப்பு சுல்தான் போரில் ஏவுகணைகளை பயன்படுத்திய ஓவியத்தை நாசா தனது வரவேற்பறையில் வைத்து மரியாதை செய்துள்ளது.

( திப்பு வாழ்க்கைக் குறிப்பு : 1750ம் ஆண்டு தேவனாகல்லியில் பிறந்த திப்பு சுல்தான், 1782 முதல் 1799 வரை மைசூர் அரசுக்கு மன்னராக திகழ்ந்தார். மைசூர் புலி என வர்ணிக்கப்படும் திப்பு, ஆங்கிலேயருக்கு எதிராக தீரத்துடன் போரிட்டு போர் களத்திலேயே 1799 மே 4ம் தேதி வீரமரணமடைந்தார்.)