ஜல்லிக்கட்டு போராட்டம் ஓராண்டு நிறைவு… மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு சென்னை: ஜல்லிக்கட்டு புரட்சி வெடித்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அதனால் பல பலன்களை தமிழகம் அடைந்துள்ளது. ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டி, எருது விடுதல் உள்ளிட்டவற்றுக்கு உச்ச நீதிமன்றம் 2014ல் தடை விதித்தது. 2017லும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை அடுத்து ‘வாடிவாசல் திறக்கும்வரை வீடு வாசல் செல்ல மாட்டோம்’ என்று தமிழக இளைஞர்கள் வீதியில் களமிறங்கினர்.

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு தடை விலக்கிக்கொள்ளப்படாத நிலையில், கடந்த ஆண்டு காளை மாடுகளை களத்திற்கே கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது. அலங்காநல்லூரில் காளைகள் சிறை பிடிக்கப்பட்டன. இதனால் உரிமைகளை இழந்த மக்களின் உணர்வு போராட்டம் கொந்தளிப்பாக வெடித்தது.

கிளம்பியது இளைஞர் படை

எந்த ஒரு போராட்டத்திலுமே இளைஞர்கள் பங்களிப்பு அவசியம். நமது அரசியல் கலாசாரம் சீரழிந்து கிடப்பதற்கு, படித்த இளைஞர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடாததும், வாக்கு கூட போடச் செல்லாததுமே காரணம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஆனால், ஜல்லிக்கட்டுக்கு திரண்டவர்கள் பெரும்பான்மையோர் இளைஞர்கள்தான். இதனால்தான் அந்த போராட்டம் விரைந்து வெற்றிக்கொடியை நாட்டியது.

இதே நாளில் அன்று

மெரினாவில் கடந்த ஆண்டு இதே நாளில்தான், மெரினாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி எழுச்சியை தொடங்கினர். ஆண், பெண் என்ற பேதம் அங்கு இல்லை. பெற்றோர்களே ‘சென்று வா, வென்று வா’ என்று மகன்களையும், மகள்களையும் போர்க்களம் அனுப்புவதை போன்ற புறநானூறு கால தமிழர்களை போல பூரிப்போடு அனுப்பி வைத்தனர்.

போர்க்களமானது மெரினா

மெரினா கடற்கரை, குருக்ஷேத்திரத்தை நினைவுபடுத்துவதை போல பெரும் போர்க்களமானது. அங்கு எங்கே திரும்பினாலும், போர், போர்.. உரிமைக்கான போர் என்ற கோஷம் மட்டுமே எழுந்தது. அது தமிழகத்தின் பட்டி தொட்டியிலும் எதிரொலித்தது. மதுரை தமுக்கம் மைதானம், கோவை மற்றும் நெல்லையிலுள்ள வ.உ.சி மைதானம் என அனைத்து மைதானங்களும் மெரினாக்களாக மாறி அங்கும் எழுச்சி ஏற்பட மெரினா வித்திட்டது.

கோலாகல ஜல்லிக்கட்டு

திருச்சி, சேலம், வேலூர், உட்பட தமிழகம் முழுவதும், புதுச்சேரியிலும் ஆறு நாட்களுக்கும் மேலாக போராட்டம் களம் கண்டது. இந்நிலையில், ஜனவரி 21ம் தேதி தடையை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான, அவசர சட்டம் இயற்றப்பட்டது. இதன்பிறகே போராட்டம் கைவிடப்பட்டது. இந்த வருடம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் என எல்லா இடங்களிலும் உலகம் மெச்ச ஜல்லிக்கட்டு நடைபெற இந்த போராட்டம்தான் வித்திட்டது.

பல நன்மைகள்

வெறும் ஆறு நாள், ஜல்லிக்கட்டு போராட்டம் வேறு பல சமூக மாற்றங்களுக்கும் காரணமாக இருந்தது. அதில் குளிர்பானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு, இயற்கை உணவு மீதான நாட்டம், உள்நாட்டு விலங்குகள், பறவைகள் மீதான பாசம் ஆகியவற்றை தூண்டியது இந்த போராட்டம். இதனால் தமிழகத்தில் குளிர்பான விற்பனை கடந்த ஆண்டு கிடுகிடுவென குறைந்தது. பன்னாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்வதில்லை என வணிகர் சங்கங்கள் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தின.

நாட்டு மாட்டு பால்

நாட்டு மாட்டு பசும்பால் என்ற பெயரில் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்ய ஆரம்பிக்கும் புது தொழில் படித்த இளைஞர் வட்டாரத்தில் பிரபலம். ஒசூரில் பண்ணை வைத்து, பெங்களூரில் கூட சப்ளை செய்கிறார்கள் என்றால் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நங்கூரம் நச் என பாய்ச்சப்பட்டதுதான் காரணம். ஆர்கானிக் கடைகள் ஆங்காங்கு உருவாகிவிட்டன.

வேரைத்தேடும் விழுதுகள்

இன்று தமிழக இளைஞர்கள் பலருக்கும் நாட்டு காளை மாட்டு இனங்களின் பெயர்கள் சரளமாக தெரிகிறது. அவ்வளவு ஏன், கிராமம்தானே என இத்தனை காலமாக புறக்கணித்த தங்கள் சொந்த ஊர்களை நகர இளைஞர்கள் தேடி சென்று, குலதெய்வம் கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு வருகிறார்கள். பாரம்பரியத்தின் வேரை கெட்டியாக பிடிக்க கற்றுக்கொடுத்துவிட்டது ஜல்லிக்கட்டு போராட்டம்.

உத்வேகம் அவசியம்

இந்த உத்வேகம் படிப்படியாக குறையாமல் காப்பதில்தான் இளைஞர்களின் வெற்றி அடங்கியுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில் தீவிரமாக இருந்த இளைஞர்கள், பிற்காலத்தில் அந்த சுதந்திரத்தின் மதிப்பு தெரியாமல் மாறியதை போன்ற நிலை தமிழர் பாரம்பரிய போராட்டத்தின் நீட்சியாகிவிட கூடாது. ஆறே நாளில் தமிழகம் கண்ட இந்த அசத்தல் மாற்றத்திற்கு வித்திட்ட ஜல்லிக்கட்டு எப்போதும் நினைவில் வைக்கத்தக்கது.