ஸ்டெர்லைட் ஆலை அல்லது ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் மீளவிட்டான் பகுதியில் அமைத்துள்ள தாமிர உருக்கு தொழிற்சாலை ஆகும். இதன் உரிமையாளர் அனில் அகர்வால் லண்டனை தலைமையிடமாக கொண்ட வேதாந்தா ரிசேர்ஸஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் ஆவார். வேதாந்தா நிறுவனத்திற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தாமிரத்தாதுக்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் இருக்கின்றன.

ஸ்டெர்லைட் ஆலை கடந்து வந்த பாதை:

1995 ஆம் ஆண்டில் அனில் அகர்வால் இந்தியாவில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை தொடங்க திட்டமிட்டது முதலில் குஜராத்தில் தான். இத்தகைய ஆலைக்கு குஜராத் மாநிலத்தில் அனுமதி கிடைக்காததையடுத்து பல மாநிலங்களில் ஆலை அமைக்க அனுமதி கோரப்பட்டது. இறுதியாக 30.10.1994-ல் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.  இதற்காக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழங்கிய அனுமதி கடிதத்தில், தொழிற்சாலையானது மன்னார் வளைகுடாவில் இருந்து 25 கி.மீ தொலைவில் இருக்க வேண்டும், தொழிற்சாலையை சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் அமைக்கப்பட வேண்டும் என்று நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தது.

 

தூத்துக்குடி துறைமுக நகரம் என்பதால், ஆஸ்திரேலியாவில் வெட்டி எடுக்கப்படும் தாமிரங்களை எளிதாக கப்பல்கள் மூலம் கொண்டு வந்து விடலாம். இத்தகைய ஆலையில் தாமிரத்தை உருக்கி தகடுகளாக மாற்றும் போது ‘ பை ப்ராடக்ட் ‘ என்னும் முறையில் கிடைக்கக் கூடிய தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம் ஆகியவற்றின் மூலமும் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பது அவர்களின் கணக்கு.

போராட்டம்.. வழக்குகள்.. தீர்ப்புகள் :

தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசியல் கட்சிகள், சில அமைப்புகளுடன் சேர்ந்து மக்களும் போராட்டத்தில் களம் இறங்கினர். சில கட்சிகள் அரசியல் லாபத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலைக்கு எதிராக 2 வருடங்களாக போராட்டங்கள் நடைபெற்றும் தகுந்த நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில், தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்குவது, ஊர் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பது, மரம் நடுதல் போன்ற பணிகளில் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஈடுபடத் தொடங்கினர். மேலும், தென் மாவட்டங்களில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களால் போராட்டத்தின் வேகமும் குறையத் தொடங்கியது.

1997-ல் மக்களின் போரட்டங்களையும் மீறி இயங்க ஆரம்பித்த ஸ்டெர்லைட் ஆலையானது மன்னார் வளைகுடாவில் இருந்து 14 கி.மீ தொலைவில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக-டை-ஆக்சைடுடன் நச்சு வாயுக்களும் வெளியாகி அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு மூச்சு திணறல், தொண்டை மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டத் தொடங்கினர். மேலும், சமூக ஆர்வலர்கள் மக்களின் வாழ்வாதாரத்தையும், மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் மேற்கோள்காட்டி ஆலைக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆலையை இயக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ரூ.100 கோடியை நஷ்ட ஈடாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் 2013 ஏப்ரல் மாதத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.   

இதற்கிடையில், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடியது. இதற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்தது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து விஷ வாயு வெளியானதற்கு எத்தகைய ஆதாரங்களும் இல்லை, பல்வேறு தொழிற்சாலைகள் உள்ள இடத்தில் ஸ்டெர்லைட் ஆலையும் இருப்பதால் வாயு கசிவு குறிப்பிட்ட ஆலையில் இருந்து வந்தது என்று உறுதிப்படுத்த முடியாது என தீர்ப்பளித்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்.

2013-ல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பட்நாயக், கெஹர் ஆகியோர் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம்:

20 ஆண்டுகளை கடந்து இயங்கிக் கொண்டிருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சிப்காட் விரிவாக்கப் பகுதியில் தனது 2-வது ஆலையின் விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்க்கும் வகையில் 12.02.2018-ம் தேதியன்று குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போரட்டத்தில் இறங்கினர். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளி வரும் நச்சுப் புகையின் தாக்கத்தால் நெஞ்சு எரிச்சல், மூச்சுத் திணறல், புற்றுநோய், சிறுநீரக கோளாறுகள் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர், மண் வளம் பாதிக்கப்படுகிறது என்று போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.

புதிதாக அமையவிருக்கும் ஆலை ஏற்கனவே உள்ள ஆலையை விட நான்கு மடங்கு பெரியது. இதனால் பாதிப்புகள் பன்மடங்கு அதிகரிக்கும். எனவே, மக்களுக்கு ஏற்பட உள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு அமைய உள்ள 2-வது ஆலைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று குழந்தைகள் முதல் வயதானோர் வரை விடிய விடிய போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தங்களது உயிரை கொடுத்தாவது ஆலையை அமைய விடமாட்டோம் என்று சூளுரைக்கின்றனர். போரட்டத்தில் ஈடுபட்டு வரும் 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எனினும், போரட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராம மக்கள் போராடி வரும் வேளையில் 2-வது ஆலைக்கு ஆதாரவாக சில சமூக அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட தருணத்தில் அந்நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தங்கள் கைகளில் “ தொழிற்சாலை வேண்டும்” என்ற பதாகைகளை ஏந்தி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நாடு முழுவதும் உள்ள பல ஆலைகள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகக் கூறி அவற்றிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும், வழக்குகள் தொடர்வதும் தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இத்தகைய தொழிற்சாலைகள் வாழ்வாதாரத்தை பாதிக்கும்படி இல்லாமல், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், நாட்டின் வளர்ச்சியையும் உயர்த்துமேயானால் தேவையின்றி மக்கள் இரவு பகல் பாராமல் போராடிக் கொண்டிருக்கமாட்டார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் இரண்டாவது ஆலையின் விரிவாக்கத்திற்கு 640 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு சிப்காட் மூலம் கையகப்படுத்தியுள்ளதாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த மக்கள் தொடர் போரட்டத்தில் இறங்கி உள்ளனர்.

 

 

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் அப்பகுதி மக்களுக்கு உடல் நலக் கோளாறுகள் ஏற்படுவதாகவும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி தூத்துக்குடி மற்றும் குமரரெட்டியாபுரம், ஸ்ரீ வைகுண்டம், புதியம்புத்தூர், முத்தையாபுரம், முள்ளக்காடு உள்ளிட்ட கிராமப்புறப் பகுதிகளில் கடுமையான எதிர்ப்பு போராட்டங்கள் கிளம்பியுள்ளது.

தூத்துக்குடி சிப்காட்டில் அமைய உள்ள ஸ்டெர்லைட்டின்  இரண்டாவது ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதிக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கூறியும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்தனர். மேலும்,  போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து (மார்ச் 24)  வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் என அனைத்து கடைகளும் முழு கடையடைப்பில் ஈடுபட்டனர். ஆட்டோ, வேன், மினி பஸ்கள் என எந்த வாகனங்களும் ஓடவில்லை. அப்பகுதியில் இருந்த 12 திரையரங்குகளில் நேற்றைய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

2000 மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.  50-க்கும் அதிகமான சங்கங்கள் மற்றும் அமைப்புகள் போரட்டத்தை அடுத்த நாளும் நீட்டிக்கவும் ஆதரவளித்து உள்ளனர். இந்த போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் நேற்று மாலை நடத்திய நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்காண மக்கள் பங்கேற்றனர். ஆகையால்,  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்பு போராட்டம் நேற்று மீண்டும் உதிக்கத் தொடங்கியுள்ளது.

மே 22, 2018  இன்று துப்பாக்கி குண்டுகளுக்கு பலர் இரையான நிலையில் போராட்டம் தொடர்கிறது………