கிட்டதட்ட கடந்த 50 ஆண்டுகளாக தமிழக அரசியலில் அழிக்க முடியாத வார்த்தையாக வலம் வந்தது திராவிடம். 

தமிழகத்தில் கடந்த 1944ம் ஆண்டு நீதிக்கட்சியிலிருந்து திராவிடக் கழகத்தை பெரியார் உருவாக்கினார். அதன் முக்கிய கொள்கையாக சமூக நீதிக்கொள்கைகள் இருந்தாலும், பார்பணியத்திற்கு எதிரானது தான் திராவிடம் என்றே பெரியார் கூறினார். தேர்தல் அரசியலில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஈடுபாடு இல்லாமல் இருந்தார். இதனால் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திராவிட கழகத்தில் முக்கிய தலைவர்களாக இருந்த குடந்தை கே.கே. நீலமேகம், வி.ஆர். நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், என்.வி. நட்ராஜன், இ.வி.கே. சம்பத் ஆகிய ஐம்பெரும் தலைவர்களும் 1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினர்.

திராவிட முன்னேற்ற கழகம் 1949ம் ஆண்டு உதயமாகியிருந்தாலும் 1967ம் ஆண்டு அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் முதன் முதலாக அறிஞர் அண்னாவின் தலைமையில் ஆட்சியை அமைத்தது. அண்ணாவை தொடர்ந்து நெடுஞ்செழியன் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பிறகு மு.கருணாநிதி 1969ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அன்று முதல் இன்று வரை திராவிட முன்னேற்ற கழகத்தில் வேறு யாரும் முதலமைச்சராக உருவாகவில்லை எனபது குறிப்பிடத்தக்கது. 1953ம் ஆண்டு திராவிடமுன்னேற்ற கழகத்தில் இணைந்த எம்.ஜி. ராமச்சந்திரன் மக்களின் பெரும் ஆதரவும் சினிமா புகழும் இருந்ததால் 1972ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். பின்னர் 1977ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மரணம் வரை அவரே தமிழக முதலமைச்சராக இருந்தார். அதனைத்தொடர்ந்து எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமசந்திரன் சிறிது காலம் முதலமைச்சராக பதவி வகித்தாலும், செல்வி. ஜெயலலிதாவே அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக உருவெடுத்தார். மேலும் 1991, 2001, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் வெற்றிபெற்று முதலமைச்சராகவும் பொறுப்புவகித்தார்.

மு.கருணாநிதி, போர்வாள் என புகழ்ந்த வையாபுரி கோபால்சாமி, மு.க. ஸ்டாலினுக்கு தான் வகித்து வந்த பொறுப்பை கொடுத்ததால், திமுக தலைமையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1993ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். ஆனால் அவர் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து ஜொலித்தது போல அவரால் அதற்கு பிறகு அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. மேலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தேர்தல்களில் பெரிய வெற்றிகளையும் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் முக்கிய கட்சிகளாக திகழ்ந்த திமுக, அதிமுக, மதிமுக கட்சிகளுக்கு போட்டியாக விஜயகாந்த் தலைமையில் 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி தேசிய முற்போக்கு திடாவிட கழகம் (தேமுதிக) உருவானது. 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் தன்னை எதிர்த்து நின்ற திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களை தோற்கடித்து வெற்றிபெற்று சட்டப்ப்பேரவைக்குள் நுழைந்தார். அதனைத்தொடர்ந்து 2011ம் ஆண்டு அதிமுகவிடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றிபெற்று சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவராக உருவானார் விஜயகாந்த். ஆனால் 2016ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வைகோ மற்றும் கம்யூனிச தலைவர்களுடன் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டார்.

1944ம் ஆண்டு பெரியார் தொடங்கிய திராவிடம் என்ற பெயர் 2005ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேமுதிக கட்சி வரை எதிரொலித்தது. அதன் மூலம் தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் திராவிடம் என்ற பெயர் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்ற நிலையே இருந்துவந்தது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுகவின் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையில் ஓர் அணியும், வி.கே.சசிகலாவின் தலைமையில் மற்றொரு அணியும் உருவானது, பின்னர் அதுவும் மூன்றாக பிரிந்து எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் இன்னொரு அணி உருவானது. இவையனைத்திற்கும் மேலாக ஜெயலலிதாவின் இரத்த உறவு வாரிசு நான் தான் எனக்கூறி அவரின் அண்ணன் மகள் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்தது மட்டும் இல்லாமல் அவருடைய கணவர் மாதவனோடு இணைந்து எம்.ஜி.ஆர். ஜெஜெ. திமுக என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய சில மாதங்களில் மாதவனுக்கும், தீபாவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அவர்கள் பிரிந்து மீண்டும் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவை எல்லாவற்றையும் தாண்டி திடீரென்று நடிகர் கமல் தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் மரணத்தாலும் கருணாநிதியின் வயது முதிர்வாலும் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாகக் கூறி தானும் ஒரு திராவிட கருத்தியலை பின்பற்றுபவன், பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவன் எனக்கூறிக்கொண்டு ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துவந்தார். இந்நிலையில் அவர் ஒரு தனிக்கட்சியையும் தொடங்கப்போவதாக கூறினார். அதனால் கமல்ஹாசன் தொடங்க இருக்கும் புதிய கட்சியில் திராவிடத்தின் பெயர் இருக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அப்படி இருந்தால் என்ன தவறு என்று பதில் அளித்தார் கமல்ஹாசன். ஆனால் பிப்ரவரி மாதம் 21ம் தேதி அவர் கட்சி தொடங்கும் போது மக்கள் நீதி மய்யம் என்ற புதுவிதமான பெயரை அறிமுகம் செய்தார். சுதந்திரத்திற்கு பிறகான தமிழக அரசியல் வரலாற்றில் தமிழக மக்களிடையே பிரபலமான ஒருவர் தொடங்கிய கட்சியில் திராவிடம் இல்லாதது இதுவே முதல்முறை ஆகும். இதனால் கமல்ஹாசன் திராவிடத்தையும் அதன் கொள்கைகளையும் ஆதரிக்கிறாரா இல்லை எதிர்கிறாரா என்று தெரியாமல் அவருடைய ரசிகர்களும், ஆதரவாளர்களும், தொண்டர்களும் குழப்பத்தில் இருந்துவருகின்றனர்.

இந்நிலையில் சசிகலாவின் தலைமையை ஏற்க மறுத்த பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் எதிராக அணி திரட்டிய டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏக்கள் வெளியே வந்தனர். டி.டி.வி. தினகரனும் அவர்களை எதிர்த்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் அவர்களை தொடர்ந்து எதிர்த்து அதிமுக கட்சியை முழுமையாக கைப்பற்ற வேண்டுமானல் அதற்காக ஒரு அரசியல் இயக்கம் தேவை எனக்கூறி இன்று (15-03-2018) ஒரு அரசியல் கழகத்தின் பெயரை அறிவித்தார். மத்திய அரசையும் அதன் செயல்பாடுகளையும் துணிச்சலாக விமர்சித்து வந்த டி.டி.வி. தினகரனை அவரது ஆதரவாளர்கள் மக்கள் செல்வர், திராவிடத் தலைவர் என்றெல்லாம் புகழ்ந்து வந்தனர். ஆனால் அவரோ அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று தனது கழகத்திற்கு பெயர் வைத்திருக்கிறார். டி.டி.வி. தினகரன் ஆரம்பித்த கழகத்தின் சின்னமாக அவருக்கு ஆர்.கே. நகரில் வெற்றியை பெற்றுத்தந்த குக்கர் சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு, சிவப்பு, வெள்ளை என்ற அதிமுகவின் மூவர்ண கொடியில் அண்ணாவின் உருவப்படம் இருந்த இடத்தில் அதனை நீக்கிவிட்டு ஜெயலலிதாவின் புகைப்படத்தை மட்டும் வைத்துள்ளார். அதில் எம்.ஜி.ஆரின் உருவப்படமும் இல்லை என்பது கூடுதலான செய்தி.

கமல்ஹாசன் கட்சி தொடங்கியபோது அவரது கட்சியின் பெயரில் திராவிடம் இடம்பெறவில்லை எனக்கூறி பல அரசியல் விமர்சகர்களும் குற்றம்சாட்டினர். கமல்ஹாசன் திராவிடத்தின் பெயரைக் கூறி மக்களை ஏமாற்றுகிறார் என்றும் அவர் திராவிடக் கொள்கைகளுக்கு எதிரானவர் எனவும் சமூகவலைதளங்களில் இளைஞர்கள் பலரும் கடும் விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில் டி.டி.வி.தினகரனும் தனது கழகத்தின் பெயரில் திராவிடத்தை இணைக்காததால் சமூகவலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசியல் விமர்சகர்கள் தான் ஆரம்பித்த அரசியல் கட்சியின் பெயரில் கழகத்தை இணைத்துவிட்டு திராவிடத்தை தவிர்த்தவர் டி.டி.வி. தினகரன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்களும், நாம்தமிழர் தலைவரும் திராவிடம் தமிழகத்தில் தோற்றுவிட்டது, கழகங்கள் தமிழகத்தை ஏமாற்றிவிட்டன, கழகங்கள் இல்லா தமிழகம் விரைவில் அமையும் எனக்கூறி வரும் நிலையில் கமல்ஹாசனும், டி.டி.வி. தினகரனும் தொடங்கியிருக்கும் கட்சியில் திராவிடத்தின் பெயர் இல்லாதது, தேர்தல் அரசியலையும் தாண்டி திராவிடத்தை பின்பற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-நன்றி நியூஸ் 7