‘ஆமாமா… அந்தாளு தானே… பேசியே மயக்கிடுவான்…’ என்ற வாக்கியத்தை, அவ்வப்போது, நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள். அவ்வளவு ஏன்… நீங்களே இப்படி, சிலரிடம் சொல்லியும் இருப்பீர்கள்.

வெற்றியாளர்களிடம் உள்ள பல சிறப்பான திறமைகளுள், பேச்சுத் திறமையும் ஒன்று! இத்திறமை இருப்பதால் தான், தாங்கள் சொல்வதற்கெல்லாம், மற்றவர்கள் தலையாட்டுகிற நிலையை இவர்களால் உருவாக்க முடிகிறது. இது பெரும்பாலும், இவர்களுக்கு தான் சாதகமாக அமைந்து விடுகிறதே தவிர, எதிராளிக்கு அல்ல.

 

இதே திறமை, ஒரு ஏமாற்று பேர்வழிக்கும், அயோக்கியர்களுக்கும் அமைந்து விடுகிற போது, மற்றவர்கள் அநியாயமாக தங்களையும், தங்களது உடைமைகளையும், இன்னும் பலவற்றையும் பறிகொடுக்கின்றனர்.
விற்காத துணியை கூட, ‘இது தான் இன்றைக்கு, லேட்டஸ்ட் மாடல்…’ என, தலையில் கட்டும், துணி கடைக்காரரின் அணுகுமுறை, அவரது மயக்கும் வார்த்தைகளுக்கு கிடைத்த வெற்றி அல்லவா!
மட்டமான வாகனத்தை, மோசமான மனையை, பேச்சு சாதுரியத்தாலேயே, பிறர் தலையில் கட்டிவிடுகிற, தரகர்களின் செயல்பாட்டை, என்ன ரகத்தில் சேர்ப்பீர்கள்!

‘படிக்காத, பணக்காரப் பையன் வேணாம்பா; படிச்ச பையனா, வேலைக்கு போற பையனே போதும்பா…’ என்ற மகளின் விருப்பத்தை, கொஞ்சமும் காதில் வாங்காமல், ‘பெரிய இடத்து சம்பந்தம்; பெரிய கவுரவம்…’ என நினைத்து, தன் மகளின் வாழ்க்கையை பணயம் வைக்க துணிந்து, என்னென்னவோ சொல்லி, அவளை சம்மதிக்க வைத்து, மாட்டி விட்ட அப்பாக்கள் உண்டா, இல்லையா?

கிராமங்களில், ‘கேப்பையில் நெய் வடியுதுன்னு சொன்னா, கேக்குறவனுக்கு எங்கே போச்சு புத்தி…’ என்று அழகாக சொல்வர்.
சில திரைப்படங்கள், நாடகங்கள், பட்டிமன்றங்கள் மற்றும் மேடைப் பேச்சுகளை கேட்க போனால், விழுந்து விழுந்து, கண்ணில் நீர் வரச் சிரிப்போம். அரங்கை விட்டு வெளியே வந்து, யோசித்து பார்த்தால், எதற்கு அப்படி, ‘கெக்கே… பிக்கே…’ என்று சிரித்தோம் என, நமக்கே வெட்கமாக இருக்கும்.

அவற்றை அப்படியே, மற்றவர்களிடம் சொல்லி காட்டி, சிரிக்க வைக்கப் பார்த்தால், ‘அடச் சீ… இதெல்லாம், ஒரு நகைச்சுவையா…’ என்று, தங்கள் முகத்தை, திருப்பிக் கொள்வர்.

இதில், ஒரு உண்மை அடங்கியிருக்கிறது; இவர்கள், நம்மைப் போல், சிரிக்காததற்கு என்ன காரணம் தெரியுமா… அந்த நகைச்சுவை அரங்கில் அவர்கள் இல்லாததும், தங்களையும், அந்த நகைச்சுவையையும் பிரித்து பார்ப்பது தான்.

எதிராளியின் பேச்சிற்கு மயங்குவோருக்கும், இதே ஆற்றல் வேண்டும்.
ஆம்… அந்நேரத்தில், ரசித்து, உடனே, அவர்களின் பின்னே, நாய் குட்டி போல ஓடாமல், சிந்தித்து, ‘நாளை அல்லது அடுத்த வாரம் பதில் சொல்கிறேன்…’ என சொல்லி, களத்திலிருந்து நீங்கி விட வேண்டும்.
மறுநாள் அல்லது பிறிதொரு தினத்தில் அவர்களது கவர்ச்சி பேச்சுகளை தூக்கி எறிந்து, இவர்களது பேச்சின் சாரம் என்ன என்பதை பிரித்து பார்க்க வேண்டும்.

இதோடு, அவர்களது அணுகுமுறையின் உண்மை தன்மைகளை, ஆராய வேண்டும்.

இவர்களது உள்நோக்கம் தான் என்ன என்பதை அறிய, தராசு தட்டை, கையில் தூக்கி விட வேண்டும்.

இவர்களது பின்னணிகளை, நன்கு விசாரியுங்கள். ‘இவர்களது வேலையே, இதுதான்; இதற்கெல்லாம் நாம் மசிய கூடாது…’ என்று, மன உறுதி பூணவும், முன் வாருங்கள்.

இது மட்டுமல்ல, ‘உன் ஜம்பம், என்னிடம் பலிக்காது…’ என்று மனதிற்குள் உறுதிபட சொல்லிக் கொள்ள வேண்டும்.

தகரத்திற்கு முலாம் பூசி, தங்கமென்று தரப்படுத்த பார்ப்போரின் தராதரங்களை, எடை போட கற்று விட்டால், இவர்களின், ‘குளோரோபாம்கள்’ நம்மிடம் செல்லுபடியாகாது!

லேனா தமிழ்வாணன்