என் லைப் தான் இந்த உலகத்துலேயே ரொம்பவும் மோசமானதுன்னு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா, இங்க பல பேரோட வாழ்க்கையில நடந்த சம்பவங்களை படிச்சப்ப தான். நம்ம வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லன்னு தோனுச்சு. என் வாழ்க்கையை பத்தி சொல்றதுத்து முன்னாடி. ஒரு சின்ன எக்சாம்பிள் சொல்லனும்னு ஆசைப்படுறேன். இந்த எக்சாம்பிள் என் லைப் எப்படியானதுன்னு நீங்க தெரிஞ்சுக்க ஒரு சினாப்சிஸ் மாதிரி இருக்கும். ஒரு குழந்தை இருக்கு… அந்த குழந்தை தினமும் ஆப்பிள் சாப்பிட்டுக்கிட்டே இருக்கு… கேட்கும் போதெல்லாம், தோணும் போதெல்லாம் போதும், போதும்ன்னு சொல்ற அளவுக்கு அந்த குழந்தைக்கு ஆப்பிள் கிடைச்சுட்டே இருக்குன்னு வெச்சுக்குங்க. அந்த குழந்தைக்கு ஆப்பிள் ஒரு நாள் கிடைக்காம போனா… அது பெரிய தாக்கத்த ஏற்படுத்தாது.

இன்னொரு குழந்தை இருக்கு… அந்த குழந்தைக்கு ஆப்பிள்னா என்னன்னே தெரியாது. அது முன்னபின்ன சாப்பிட்டதே இல்லை. மத்தவங்க சாப்பிடறத மட்டும் தான் பார்த்திருக்கு. மத்தப்படி அதோட ருசி எப்படி இருக்கும்னு எதுவுமே தெரியாது. இந்த குழந்தைக்கு ஆப்பிள் சாப்பிடனும்ன்னு ஏக்கம் இருக்கும். அடுத்த குழந்தை…. அந்த குழந்தை அப்ப தான் ஆப்பிள் சாப்பிட ஆரம்பிச்சுருக்கு. அதோட ருசி அதுக்கு ரொம்ப புடிச்சு போச்சு. ரெண்டு, மூணு நாள் தொடர்ந்து ஆப்பிள் கொடுத்து ருசி காமிச்சிட்டு. நான்காவாது நாள், உனக்கு இனிமேல் ஆப்பிள் கிடைக்காது. உன் வாழ்க்கையிலே ஆப்பிளே இல்லன்னு சொன்னா… அந்த குழந்தையோட மனநிலை எப்படி இருக்கும். இந்த குழந்தை தான் நான்.

ஆப்பிள்!

நான் ஆப்பிள்னு சொன்னது என்னோட அப்பா, அம்மா. அவங்க என்மேல வெச்சிருந்த பாசம்., அன்பு, அக்கறை. என் அப்பா, அம்மா எனக்கு ரொம்ப ஃபிரெண்ட்லி. நான் இது வேணும்ன்னு எப்பவும் அவங்க கிட்ட கேட்டதே இல்லை. அதுக்கு முன்னாடியே அவங்க வாங்கிக் கொடுத்திடுவாங்க. என் அப்பா – அம்மா இந்த உலகத்துலேயே பெஸ்ட்ன்னு அவங்க என்கூட இருந்த வரைக்கும் எனக்கு தெரியாது.

சீக்கிரம் கூப்பிடுக்கிட்டான்…

ஏன்னா, அவங்க என்கூட ரொம்ப நாள் இருக்கல. சில சமயம் சொல்வாங்கல… அவங்கள அந்த கடவுளுக்கே ரொம்ப புடிச்சிருச்சு போல… அதான் சீக்கிரம் கூப்பிட்டுகிட்டான்னு. அப்படி தான்… அந்த கடவுளுக்கும் எனக்கு கிடைச்ச மாதிரி அப்பா – அம்மா வேணும்னு ஆசைப் பட்டிருப்பான் போல. சீக்கிரம் கூப்பிடுக்கிட்டான்.

பழகிட்டேன்….

கேட்கும் போதெல்லாம்ன்னு கூட சொல்ல முடியாது… நெனைக்கிறதுக்கு முன்னாடியே ஆப்பிள் கொடுத்து பழகிட்டாங்க. நானும் ருசிப் பார்த்து பழகிட்டேன். ஆனா, அப்பறம் இல்லைங்கிறது என்னால ஏத்துக்க முடியல. பணம் இருந்துச்சு, சொத்து இருந்துச்சு. ஆனா, அந்த பத்து வயசுல அதெல்லாம் வெச்சு என்ன பண்ண முடியும்ன்னு எனக்கு தெரியாது.

பசி…

பசிச்சா… எங்க வீட்டுல இருந்த பணத்த வெச்சு ஹோட்டலுக்கு போய் சாப்பிடலாம்னு கூட எனக்கு தெரியாது. யாராவது எனக்கு சமைச்சுக் கொடுப்பாங்களா. நான் டிவி பார்க்கும் போது ஊட்டிவிடுவாங்களான்னு தான் மனசு எங்கும். கொஞ்ச நாள் என் வானத்துல விடியலே இல்ல. முழுக்க இருட்டு தான். அந்த இருட்டு எனக்கு ரொம்ப பெரிய பயத்தை கொடுத்துச்சு. பெரும்பாலும் வீட்டுக்கு வெளிய படிக்கட்டுல தான் உட்கார்ந்துட்டு இருப்பேன்.

நாதியில்ல…

நான் ஸ்கூல் போனேனா? சாப்பிட்டேனான்னு கேட்க யாரும் இல்லை. சில சமயம் எனக்கு உடம்பு சரியில்லாம ஸ்கூல் போகலைன்னா கூட… கெட்டு சீரழிஞ்சு போயிட்டுருக்கான்… ஒழுங்கா ஸ்கூலுக்கு வரதே இல்லன்னு கிளாஸ்ல டீச்சர் திட்டுறாங்கன்னு என் ஃபிரண்ட் வந்து சொல்லுவான். அந்த வயசுல எப்படி கெட்டு சீரழிஞ்சு போறதுன்னு கூட எனக்கு தெரியாது. ஒரு நாள்…. பணம், சொத்து இருந்தா.. அதுக்காகவாவது சொந்த, பந்தம் வரும்ன்னு சொல்வாங்க. ஆனா, என்ன தேடி அப்படி கூட யாரும் வரல. எனக்கு என் சொந்த ஊரு எதுன்னு தெரியாது. பிறந்ததுல இருந்து., எனக்கு தெரிஞ்ச ஒரே ஊரு சென்னை மட்டும் தான். ஒரு வருஷம் என் வாழ்க்கை இருட்டாவே இருந்துச்சு… ஒரு நாள் விடிஞ்சது. அன்னிக்கு எனக்கு ரொம்பவே உடம்பு சரியில்லாம இருந்துச்சு. நான் வீட்டுக்குள்ளயே அதிக நேரம் இருந்தனால. யாருக்கும் நான் என்ன பண்றேன், ஏது பண்றேன்னு தெரியாது. என்னால, தானா எழுந்து ஹாஸ்ப்பிட்டல் போற அளவுக்கு தெம்பு இல்ல. ஒருவேளை அன்னிக்கி சின்னமணி என்ன பார்க்கலன்னா நான் இன்னிக்கு உயிரோட இருந்திருக்க கூட வாய்ப்பு இல்லை.

தண்ணிப் பிடிக்க…

எனக்கு வீட்டு வேலைன்னு எதுவுமே இருக்காது. வீட்டுல நான் தண்ணி பிடிச்சு வெச்சதும் இல்ல. வாரத்துக்கு ஒரு நாள் தண்ணி வரும். எங்க தெருவுல யாருக்கு தண்ணி வேணுமோ, அந்த நேரத்துல வீட்டு காம்பவுண்ட் கேட் திறந்து வந்து எடுத்துட்டு பைப் ஆப் பண்ணிட்டு போயிடுவாங்க. அப்படி தான் அன்னக்கி சின்னமணி, இன்னொரு அக்கா கூட என் வீட்டுக்கு வந்தாங்க. அவங்க எங்க ஏரியாவுக்கு புதுசு. மத்தவங்க எல்லாருக்கும் என்ன தெரியும்ங்கிறதுனால, என்கிட்டே தண்ணிப் பிடிக்க எதுவும் கேட்க மாட்டங்க. அவங்களா வந்து பிடிச்சுட்டு, போயிடுவாங்க. சின்னமணி புதுசுங்கிறதுனால ஒரு பேச்சுக்கு என்கிட்டே தேங்க்ஸ் சொல்லிட்டு போக உள்ள வந்தாங்க. அப்பதான் நான் முடியாம வீட்டுல படுத்திருக்கிறது தெரிஞ்சு என்ன ஹாஸ்ப்பிடல் கூட்டிட்டு போனாங்க.

அன்னியில இருந்து….

அன்னியில இருந்து தான் என் வாழ்க்கையில இருட்டு விலக ஆரம்பிச்சது. எனக்கு மூணு வேலை திரும்ப நல்ல சோறு கிடைக்க ஆரம்பிச்சது. எனக்கு நல்ல நாள், கெட்ட நாள் எல்லாம் தெரியாது. அப்பா – அம்மாவுக்கு நான் திதியும் சரியா கொடுத்து இல்லை. அப்படி கொடுக்கணும்ன்னு எனக்கு தெரியாது. ஆனா, என்னை அவங்க குழந்தை மாதிரி பார்த்துக்க ஆரம்பிச்சுட்டாங்க. என்னிக்கி கோவில் போகணும், என்னிக்கி திதி கொடுக்கணும். என்னிக்கி சிக்கன் சாப்பிடக் கூடாதுன்னு ரொம்ப அக்கறை எடுத்துக்கிட்டாங்க.

என்ன உறவு…?

எனக்கு அவங்கள என்ன உறவு சொல்லிக் கூப்பிடனும்ன்னு தெரியல. ரொம்ப நாளா சின்னமணின்னு பேரு சொல்லி தான் கூப்பிட்டுட்டு இருந்தேன். ஆனா, என்னைவிட ரொம்ப வயசுல மூத்தவங்க. கொஞ்ச நாள் கழிச்சு தான் நான் அவங்கள அத்தைன்னு கூப்பிட ஆரம்பிச்சேன். அத்தைன்னு ஏன் கூப்பிடுற.. நீ என்ன அம்மான்னே கூப்பிடலாம்ன்னு சொல்வாங்க. ஆனா, எனக்கு அப்படி ஏனோ கூப்பிட வரல. அவங்க பையன் வெளிநாட்டுல மேற்படிப்பு படிச்சுட்டு இருந்தாரு. என்னையும், அதே காலேஜ்ல படிக்க அனுப்புறதா சொல்வாங்க. காலேஜ்! என் வாழ்க்கை அப்படியே மாற ஆரம்பிச்சது. எனக்கான நட்பு வட்டாரம் ரொம்பவே சிறுசுங்க. மொத்தமே நாலு பேரு தான். எங்களுக்கு கெட்டப் பழக்கம் எல்லாம் இல்ல. காலேஜ் போறோம்ன்னு தான் பேரு. கட்டடிச்சுட்டு சினிமாவுக்கு கூட போனதில்ல. வீகென்ட்ல மட்டும் தான் சினிமா, பார்க், பீச் எல்லாம். நான் படிப்புல அபோவ் ஏவறேஜ். எனக்கு ஃப்ரெண்ட்ஸ் கம்மியா இருந்தாலும், விரோதிங்கன்னு யாரும் இல்லை. எல்லாருக்கும் என்ன பிடிக்கும். ஆனா, நான் அதிகமா யார்க்கிட்டயும் ஓட்டிக்க மாட்டேன். அதனால, என்னோட வாழ்க்கை ஓர் புறா கூண்டு மாதிரி குட்டியா தான் இருந்துச்சு.

கிரீன் கார்டு!

பெரும்பாலான பெத்தவங்க இத அனுபவிச்சிருப்பாங்க. சின்னமணி அத்தையோட பையனுக்கு அமெரிக்கவுல படிச்சு முடிச்சதும் நல்ல வேலை கிடைச்சது. கூடவே கிரீன் கார்டும் கிடைச்சது. ஒரே ஒரு தடவ நடுவுல வந்து பார்த்துட்டு போனாரு. அதாவது, அவரு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டதா கூட்டிட்டு வந்து காமிச்சுட்டு போனாரு. பாவம் அவங்க! சின்னமணி அத்தைக்கு அவங்க பையன் மட்டும் தான் ஒரே துணை. அவங்க ஹஸ்பன்ட் கல்யாணம் ஆகி கொஞ்ச வருஷத்துல இறந்துட்டாரு. அவங்க தான் கஷ்டப்பட்டு அந்த அண்ணாவ படிக்க வெச்சு. சொந்த காரங்க முன்னடி பெரியாளு ஆக்கிக் காட்டணும்னு ரொம்பவே வைராக்கியமா இருந்து எல்லாமும் பண்ணாங்கலாம். ஆனா, அந்த அண்ணா இப்படி சொல்லாம கல்யாணம் பண்ணிட்டு அங்கேயே செட்டில் ஆகிடுவாருன்னு நான் கனவுல கூட எதிர்பார்க்கலன்னு சின்னமணி அத்தை ரொம்ப நாள் அழுது புலம்பிட்டே இருந்தாங்க.

மகனானேன்!

அவங்க எனக்கு யாருமே இல்லாத போது அம்மாவ இருந்தாங்க. அவங்களே அம்மான்னு கூப்பிடுன்னும் சொல்லிருக்காங்க. அப்போ எனக்கு ஏதும் தோனல. ஆனா, அவங்க அழுகைய நிறுத்த எவ்வளவோ முயற்சி பண்ணியும் என்னால முடியல. அப்பதான் தோனுச்சு…. எனக்கு அம்மா இல்லாத போது அவங்க எனக்கு அம்மாவ வந்தாங்க. இப்போ அவங்களுக்கு மகன் இல்லன்னு வருத்தப்படுறாங்க. அப்போ நான்தானே மகனா இருக்கணும். அம்மா! அந்நாள் வரைக்கும் சின்னமணி அத்தைன்னு கூப்பிட்டுட்டு இருந்த நான். மறுநாள் காலையில எழுந்து அவங்க வீட்டுக்கு போயி அம்மான்னு கூப்பிட்டேன். அவங்க அழுகை குறையில… அதிகம் ஆயிடுச்சு. என்ன கட்டிப்பிடிச்சு ரொம்பவே அழுதாங்க. அதான் நீ இருக்கல அப்பறம் நான் ஏன் அழுகனும்ன்னு சொல்லி கண்ணீர துடைச்சுக்கிட்டங்க. பிரியா பந்தம்! இந்த உலகத்துல எனக்குன்னு இருக்க ஒரு உயிர்னா அவங்க தான். எங்க ரெண்டு பேருக்குமே அப்படி தான். நான் இப்ப ஒரு நல்ல வேலையில வாழ்க்கையில சந்தோஷமா, நிம்மதியா இருக்கேன்னா அதுக்கு சின்னமணி அம்மா தான் காரணம். எனக்கு லவ்வெல்லாம் வந்ததே இல்லை. சின்னமணி அம்மா அடிக்கடி கேட்பாங்க… “ஏண்டா நீ லவ் பண்ணலன்னு.” சிரிச்சுட்டே… “யாரு இல்லன்னு சொன்னாங்க… இந்த உலகத்துலயே நான் உங்கள தான் ரொம்பவே லவ் பண்றேன்னு..” சொல்வேன். இப்போ கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்கிறதும் அவங்க தான். நமக்கான வாய்ப்பு மட்டுமில்லங்க… நமக்கான உறவும் நாமதான் அமைச்சுக்கனும். இந்த உலகத்துல நல்லவங்க நிறையா பேர் இருக்காங்க. நாமதான் அவங்கள பாக்குறதும் இல்ல, பழகுறதும் இல்ல.